தமிழக அரசின் சார்பில் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று (ஜன.6) கூடிய நிலையில், தேசிய கீதம் முதலில் பாடப்படவில்லை என்று கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதில் மரபை மீறியது யார் என்று கேள்வி எழுந்துள்ளது.
முதலில் தேசிய கீதம்தான் பாடப்பட வேண்டும்
2025ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் ஆர்.என்.உரையுடன் தொடங்க இருந்தது. இந்த நிலையில், பேரவை மரபுப்படி முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஆனால், முதலில் தேசிய கீதம்தான் பாடப்பட வேண்டும், மாநில சட்டப்பேரவைகளில் அவ்வாறுதான் பாடப்படுகிறது என்று ஆளுநர் சபாநாயகரையும் முதலமைச்சரையும் வலியுறுத்தி உள்ளார். ஆனால், அது மரபு அல்ல என்றும் தேசிய கீதம் இறுதியில் இசைக்கப்படும் என்றும் சபாநாயகர் மறுத்துள்ளார்.
இதனை ஏற்காத ஆளுநர் ரவி, பேரவையில் தன்னுடைய உரையையும் வாசிக்காமல் அவசர அவசரமாக பேரவையை விட்டு வெளியேறினார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், ஆளுநர் மாளிகை இது குறித்து விளக்கம் அளித்து இருந்தது.
’வேண்டுகோள் விடுத்த ஆளுநர்’
அதில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது. இன்று ஆளுநர் அவர்கள் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் அவர்கள் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான முதலமைச்சர் இடமும் சட்டப்பேரவை சபாநாயகரிடமும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் அவர்கள் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்’’ என்று கூறி இருந்தது.
’ஆளுநர்தான் மரபை மீறி இருக்கிறார்’
இந்த நிலையில் மரபை மீறியது ஆளுநரா இல்லை அரசா என்று கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூறும்போது, ’’ஆளுநர்தான் மரபை மீறி இருக்கிறார். எப்போது தமிழ்த்தாய் வாழ்த்தை அதிகாரப்பூர்வமாக நாட்டுப் பண்ணாக அறிவித்தோமோ, அப்போதில் இருந்தே முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது நடைமுறையில் இருக்கிறது. குறிப்பாக அண்ணா காலத்தில் இருந்தே 1969 வாக்கில் இருந்தே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆளுநர் ரவி, இதை மறுத்து தேசிய கீதத்தை முதலில் வாசிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். எனினும் இதை அரசு (பேரவையில் சபாநாயகர்) மறுக்க, அவசரம் அவசரமாக வெளியேறுகிறார். தேசிய கீதத்தை ஒரு காரணமாகச் சொன்னாலும் ஆளுநருக்கு உரையை வாசிக்க விருப்பம் இல்லை என்றுதான் தெரிகிறது’’ என்று தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடப்பது என்ன?
தமிழ்நாடு அரசின் அரசு நிகழ்ச்சிகளில் முதலாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு, நிகழ்ச்சிகள் தொடங்கப்படும். நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதம் பாடப்படுவது ஆண்டாண்டு காலமாக வழக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.