தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடானது இறுதி செய்யப்பட்டு விட்டது. தொகுதி பங்கீடானது, அதிகாரப்பூர்வமாக அந்தந்த கட்சி தலைமை மூலமாகவே அறிவிக்கப்பட்டும்விட்டது.
உறுதி செய்யப்பட்ட திமுக கூட்டணி:
திமுக கூட்டணியில் காங்கிரஸ்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
திமுக கூட்டணியில் உள்ள ம.நீ.ம மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையேயான தொகுதி பங்கீடு இன்றுடன் இறுதி செய்யப்பட்டு விட்டது. இதர கட்சிகளுக்கு இடையிலான தொகுதி உடன்பாடு ஏற்கனவே ஏற்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் தவிர, இதர கட்சிகளுக்கு, மக்களவைக்கான தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, மாநிலங்களவை ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான தொகுதிகள் எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்த பட்டியில் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி கட்சிகளுக்கிடையிலான தொகுதி ஒதுக்கீடு பட்டியல்:
திமுக கூட்டணி கட்சிகள் | போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை |
திமுக | 21 |
காங்கிரஸ் | 10 |
சி.பி.எம் | 02 |
சி.பி.ஐ | 02 |
வி.சி.க | 02 |
ம.தி.மு.க | 01 |
இ.யூ.மு.லீக் | 01 |
கொ.ம.தே.க. | 01 |
மொத்தம்= (தமிழ்நாடு + புதுச்சேரி ) | 40 |
திமுக கூட்டணியில் இ.யூ.மு.லீக் கட்சி போட்டியிடும் தொகுதியாக ராமநாதபுரம் ஒதுக்கப்பட்டுள்ளது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. விசிக கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் முதல் திமுக வேட்பாளருக்கான நேர்காணல் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றுடன் கூட்டணி கட்சிகளுக்கிடையேயான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில், நேர்காணல் மூலம் திமுக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஓரிரு நாட்களில் வேட்பாளர்களின் பட்டியல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தின் 18வது மக்களவைக்கான தேர்தல் நடைபெறும் தேதி குறித்தான அறிவிப்பு ஒரு வாரத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தேர்தலானது அடுத்த 2 மாதங்களில் பல கட்டங்களாக நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: Power Pages-1: இந்தி எதிர்ப்பு முதல் இறுதிபயணம் வரை! தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்த அண்ணா!