DMK Alliance: திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் உடனான சந்திப்பு:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதனை உணர்த்தும் விதமாகவே அடுத்தடுத்த நகர்வுகளும் அரங்கேறி வருகின்றன. முதலமைச்சர் ஸ்டாலினை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று ஒரே நாளில் இரண்டு முறை சந்தித்து பேசியுள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும், ஸ்டாலினை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என கூறப்பட்டாலும், கூட்டணிக்கான அச்சாரமாகவே அரசியல் வல்லுநர்களால் கருதப்படுகிறது.
ஓபிஎஸ் முடிவு:
அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணியில் தனக்கான மரியாதையோ, முக்கியத்துவமோ இல்லாததை உணர்ந்ததன் விளைவாகவோ, கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து, தவெக கூட்டணியில் அவர் இணைய வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது. இந்நிலையில் தான், தனது அரசியல் பயணத்தில் ஆரம்பம் முதலே கடுமையாக விமர்சித்து வந்த, திமுக தலைமையையே நேரில் சந்தித்துள்ளார். அதோடு, அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என கூறி, தேர்தல் நெருங்கும் போது கூட்டணி கணக்குகள் எப்படி வேண்டுமானாலும் அமையலாம் என்பதை உணர்த்தி சென்றுள்ளார்.
நெருங்கும் தேமுதிக:
மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்காத அதிருப்தியில் உள்ள தேமுதிக, அதிமுகவின் கூட்டணியில் தொடர்வது குறித்து அடுத்த ஆண்டு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில், திமுக தலைமை உடனான சந்திப்பு, கூட்டணிக்கான அச்சாரமாகவே தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெற்றிக்கான வாய்ப்பு என்பதோடு, யாருடன் சேர்ந்தால் சட்டமன்றத்திற்குள் நுழைய முடியும் என்பதை ஆராய்ந்து கூட்டணியை இறுதி செய்வதில் பிரேமலதா தீவிரமாக களமிறங்கியுள்ளாராம். இந்த மாதத்தில் அவர் மேற்கொள்ள இருக்கும், சுற்றுப்பயணத்த்இன் போது பிரேமலதா யாரை விமர்சித்து பேசுகிறார் என்பதை கொண்டு, திமுக ரூட்டில் செல்வாரா? எல்லது அதிமுக ரூட்டில் செல்வாரா? என்பதை கணிக்கலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
திமுக கூட்டணியின் நிலைமை:
திமுகவை பொறுத்தவரை தற்போது காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதுபோக, பல அமைப்புகளின் ஆதரவையும் பெற்று திமுக வலுவானதாகவே உள்ளது. இந்நிலையில் தான் தேமுதிக மற்றும் ஓபிஎஸ் ஆகியோரும் நெருக்கம் காட்ட தொடங்கியுள்ளனர். தேர்தலுக்கு முன்பாக மேலும் சில கட்சிகளும் திமுக கூட்டணிக்கு வரும் என, அந்த கட்சி தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார். அந்த வகையில் ஓபிஎஸ் மற்றும் தேமுதிகவிற்கு வாய்ப்பளிக்கப்படுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
பதவி ஆசை - மதிமுக அவுட்?
புதிய ஆதரவாளர்களால் கூட்டணியை வலுப்படுத்தும் அதே நேரத்தில், நீண்ட காலமாக திமுக கூட்டணியில் உள்ள மதிமுக வெளியேற்றப்படலாம் என்ற தகவலும் தொடர்ந்து கசிந்து வருகிறது. வலுவான கூட்டணியை அமைத்து இருப்பதே திமுகவின் தொடர் வெற்றிகளுக்கு காரணமாக கூறப்படுகிறது. அதற்கு நிகரான கூட்டணியை அமைக்கும் அதிமுக -பாஜகவின் முயற்சிகள் தற்போது வரை பலனளிக்கவில்லை. இதன் காரணமாக தங்களது கூட்டணியை வலுப்படுத்துவதை காட்டிலும், திமுக கூட்டணியை பலவீனப்படுத்தும் முயற்சியில் அவர்கள் களமிறங்கி இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, வைகோவின் மகன் துரை வைகோவிற்கு மத்திய இணை அமைச்சர் பதவி கொடுத்து, மதிமுகவை தங்கள் பக்கம் இழுக்க பாஜகவின் டெல்லி தலைமை விரும்புகிறதாம். இதன் மூலம், திமுகவின் கூட்டணி வலிமையானது என்ற பிம்பத்தை உடைக்க முயல்வதாகவும் தெரிகிறது.
அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளால் தமிழக அரசியல் களத்தில் அனல் வீச தொடங்கியுள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி கணக்குகள் எப்படி மாறும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.