அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், சசிகலா ஆதரவாளர்கள் அ.தி.மு.க.விற்கு சசிகலாவிற்கு தலைமை ஏற்க வேண்டும் என்று கோஷம் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், சசிகலா தலைமையிலான அ.தி.மு.க.வுடன் திவாகரன் தன்னுடைய அண்ணா திராவிடர் கழகத்தை இணைக்க உள்ளதாக சசிகலா தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தஞ்சையில் நாளை மறுநாள் நடைபெறும் நிகழ்ச்சியில் காலை 11 மணிக்கு இரு கட்சிகளின் இணைப்பு விழாவும் நடைபெற உள்ளது.
சசிகலாவின் சொந்த தம்பி திவாகரன் மீண்டும் சசிகலா தலைமையிலான அ.தி.மு.க.வில் இணைய இருப்பது சசிகலா ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சசிகலா சார்பில் வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“ சின்னம்மா அவர்களின் சீரிய தலைமையில் தாய் கழகமான அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தோடு, அண்ணா திராவிடர் கழகத்தை இணைக்கும் விழா வரும் 12-ந் தேதி செவ்வாய்கிழமை காலை 11 மணிக் தஞ்சாவூரில் அமைந்துள்ள தமிழரசி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழகத்தொண்டர்கள் மற்று் பொதுமக்கள் அனைவரும் பெரும் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அ.தி.மு.க.வில் பல்வேறு குளறுபடிகளும், குழப்பங்களும் ஏற்பட்டது. கட்சியில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்த பிறகு சசிகலா ஓரங்கட்டப்பட்டே வைத்திருந்தார். தற்போது, ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இடையே மோதல் போக்கு வலுவடைந்து எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்வதற்கு அவரது ஆதரவாளர்கள் முற்பட்டு வருகின்றனர். இந்த சூழலில், சசிகலா தன்னுடைய ஆதரவாளர்களை அதிகரிக்கும் நோக்கில் தனது பலத்தை பெருக்க இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
சசிகலாவின் சகோதரரான திவாகரன் கடந்த 2018ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அண்ணா திராவிடர் கழகத்தை தொடங்கினார். அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தினகரன் அ.ம.மு.க. என்ற கட்சியைத் தொடங்கினார். அவர் அந்த கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். அ.தி.மு.க.வை கைப்பற்றுவதற்காக சசிகலா தற்போது தமிழ்நாடு முழுவதும் புரட்சிப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் படிக்க : இலங்கை பதட்டம்! ரணில் வீட்டுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்! அடித்து நொறுக்கப்பட்ட வீடு!
மேலும் படிக்க : Shinzo Abe Japan PM : 'பிரச்சாரக் கூட்டத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஜப்பானிய முன்னாள் பிரதமர்' ஷின்சோ அபேயின் வாழ்வும் வரலாறும்..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்