கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் அதிமுக ஒன்றிய கழக உறுப்பினர்களாக உள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளான குடிநீர் திட்ட பணிகளோ, வடிகால் மற்றும் சாலை அமைத்தல் போன்ற பணிகளையோ மேற்கொள்ள அரசு அதிகாரிகள் அனுமதி வழங்குவதில்லை. மாவட்ட ஊராட்சி நிதியின் மூலம் கரூர் மாவட்டத்தில் எந்த வித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ள இயலவில்லை. மேலும், ஒப்பந்தப் புள்ளிகளில் கலந்து கொள்ளும் நபர்களை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டி உள்ளார். இப்பிரச்னை தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரை சந்தித்து மனுவையும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்துள்ளார். அதில், MGNREGS திட்டத்தில் தற்போது பல்வேறு முறைகேடுகளை அதிகாரிகள் ஒத்துழைப்போடு தற்போது ஆளும் கட்சியினர் செய்து வருகின்றனர். கரூர், கிருஷ்ணராயபுரம், பரமத்தி, அரவக்குறிச்சி ஆகிய ஒன்றியங்களில் எந்த விதமான திட்ட பணிகளும் அதிமுக கவுன்சிலர்கள் உள்ள பகுதிகளுக்கு வழங்கப்படுவதில்லை. அவர்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை ஆணையர்கள் தொடர்ந்து புறக்கணிப்பு செய்கின்றனர். அனைத்து பகுதி பொதுமக்களுக்கும் நலத்திட்ட பணிகள் மேற்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பொது நிதியை வழங்குவதில் பாரபட்சம். அதிமுகவை சேர்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப் படுவதாகவும், டெண்டர் கோரிக்கை வைக்கும் நபர்களிடம் திமுக ஒப்பந்ததாரரை நேரில் சந்தித்து பேசி சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் மட்டுமே ஒப்பந்தம் வழங்கப்படுவதாகவும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு வைத்தார். அதைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மூன்று நாள் சிறப்பு மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் பாரபட்சமின்றி மாவட்ட நிர்வாகத்தினர் செயல்பட வேண்டும் என வாக்குறுதி அளித்து உள்ள நிலையில் அதற்கு நேர் எதிர்மாறாக கரூரில் தற்போது திமுக செயல்படுகிறது எனவும் இதனை தமிழ்நாடு முதலமைச்சர் பார்வைக்கு மாவட்ட நிர்வாகம் கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் இதே நிலை நீடித்தால் அதிமுக சார்பில் போராட்டங்கள் மற்றும் உண்ணாவிரதம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிமுக ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களும் அதிமுக மாவட்ட நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.