ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மாணவர்களிடையே சாதிய மோதல் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் அரசு பேருந்தில் சாதி பாடல் சத்தமாக கேட்டதால் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். பள்ளிகளில் சாதியை குறிக்கும் வகையில், மாணவர்கள் வண்ணக்கயிறுகள் கட்டக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி, சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. தென் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள், தாங்கள் சார்ந்திருக்கும் சாதியைக் குறிக்கும் வகையில் கைகளில் வண்ணக்கயிறுகள், ரப்பர் பேண்ட்கள் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும், சாதிக்கொடிகளை பிரதிபலிக்கும் வகையில் நெற்றியில் பொட்டு வைக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த காலங்களில் சாதிய மோதல்கள் அதிக அளவில் நடந்து வந்த நிலையில் அதன் பின்னர் அமைதி ஏற்பட்டு மாவட்டம் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள், கல்வி காரணமாக வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்தநிலையில் கொரோனா பரவலுக்கு பின்னர் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமல் வீடுகளில் இருந்து சுற்றிதிரிந்து வந்த மாணவர்களிடையே பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக கடந்த சில மாதங்களாக பள்ளி கல்லூரி மாணவர்களிடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள், கல்வீச்சு என நடந்து வருகிறது. ராமநாதபுரம் பள்ளிகளின் வாசல்களிலேயே இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் கடந்த சில மாதங்களில் நடந்துள்ளது. இதனை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் போலீசாருடன் இணைந்து சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து பிரச்சினை பெரிதாகாமல் பார்த்து வந்தனர்.
இருப்பினும் மாணவர்கள் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. குறிப்பாக சாதி தொடர்பான மோதல் போக்கு அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக உள்ளது. இவ்வாறு மாணவர்கள் அரசு பேருந்தில் பள்ளி, கல்லூரிக்கு சென்றுவரும்போது மோதல் உருவாகி உள்ளது. இதில் ஒரு பிரிவை சேர்ந்த மாணவர்கள் தங்களின் சமுதாயம் சார்ந்த பாடல்களை ப்ளுடூத்தில் அதிக சத்தத்துடன் கேட்டு வந்ததால் மற்றொரு பிரிவை சேர்ந்த மாணவர்கள் கண்டித்து அதனால் தகராறும் அதனை தொடர்ந்து இருதரப்பினரும் இருவேறு இடங்களில் மோதல் நடவடிக்கையிலும் இறங்கி கல்வீச்சு வரை சென்று உள்ளனர்.
இதுதொடர்பாக இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் ராமநாதபுரம் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்படி 5 மாணவர்கள் மீதும் வழக்கு பதிந்து கைது செய்து மதுரை சிறுவர் சிறையில் அடைத்துள்ளனர். பொதுவாக மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கக்கூடாது என்ற அடிப்படையில் இதுபோன்ற சம்பவங்களின்போது சமரசம் செய்து எச்சரித்து எழுதி வாங்கியோ, நிலைய பிணையிலோ அனுப்பி விடுவது வழக்கம். ஆனால், இந்த சம்பவத்தில் சாதி மோதல் ஏற்படாமல் முற்றுப்புள்ளி வைத்து பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்பதற்காக போலீசார் கைது நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பெரியவர்களிடையே சாதி மோதல் ஏற்பட்டு பரபரப்புக்கு பஞ்சமில்லாத ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது பள்ளி மாணவர்கள் இடையே அந்த நிலை ஏற்பட்டுள்ளது கவலை அளிப்பதாக உள்ளது. இதுகுறித்து உரிய கவுன்சிலிங் நடத்தி ஆரம்ப நிலையிலேயே பெரிதாகாமல் தடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.