கிறித்துவர்களும் இஸ்லாமியர்களும் தாய் மதத்திற்குத் திரும்ப வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, சீமானின் அரசியல் நிலைப்பாட்டை விமர்சித்துள்ளார் இயக்குநரும் நடிகருமான அமீர். சீமானுடன் தமிழ்த் தேசிய மேடைகளில் அதிகம் காணப்படும் அமீர், சீமானில் நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளராக அறியப்பட்டு வரும் இயக்குநர் அமீர், ஏபிபி நாடு யூட்யூப் சேனலுக்குப் பிரத்யேகமான அளித்த நேர்காணலில் அவர் சீமானையும், நாம் தமிழர் கட்சியின் சமீப கால அரசியல் நடவடிக்கைகளையும் விமர்சித்துள்ளார். இந்த நேர்காணலில் நாம் தமிழர் கட்சியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊடுறுவல் இருப்பதாகவும் இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
`பாரதிய ஜனதா கட்சி முழுவதுமாக பெரியாரை எதிர்ப்பார்கள். திராவிடக் கட்சிகள் என்ற பெயரில் வெறும் திமுக எதிர்ப்பை மட்டும் பிரதானப்படுத்துவார்கள். அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வார்கள். நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் எனவும் நினைப்பார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இவர்களால் வளர முடியவில்லை. அதனால், இதே குறிக்கோள்களை நிறைவேற்ற சீமானைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தாய் மதம் திரும்புங்கள் என சீமான் பேசியதை பாஜகவினர் வரவேற்பதை இதனோடு ஒப்பிட்டு தான் பார்க்க வேண்டும்’ என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய இயக்குநர் அமீர், `சீமான் பொதுவெளியில் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். கடந்த பத்தாண்டுகளில் அவர் மீது நம்பிக்கை கொண்டு பல இளைஞர்கள் அவருக்குப் பின்னால் வருகிறார்கள். வாக்கு வங்கியை உயர்த்தியிருக்கிறார்கள். ஆனால் அவர் தனது வாக்களித்த மக்களின் நம்பிக்கையை இவ்வாறு பேசுவதன் மூலம் உடைத்து வருகிறார்’ என்று கூறியுள்ளார்.
`கிறித்துவர்களையும், இஸ்லாமியர்களையும் தாய் மதமான சைவத்திற்கு மாறுங்கள் என்று சீமான் சொல்வது மனித மாண்புக்கு எதிரானது. தமிழரின் மதம் குறித்து எந்த ஆதாரமும் கிடையாது. கீழடி அதற்கான சான்று. வெள்ளையர்களுக்குப் பிறகு, இந்து என்ற பெயர் மதமாக வழங்கப்பட்டது. சைவ மதத்தைச் சேர்ந்த தமிழர்கள் தங்கள் ஆன்மிக விருப்பத்தின் அடிப்படையில் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். இஸ்லாமியரான நான் என் மொழியையும், நான் பிறந்த என் இனத்தையும் நேசிக்கிறேன். ஆனால் அதற்காக நான் பிறரைச் சிறுமைப்படுத்த முடியாது. நான் தமிழனா இல்லையா என்று யாரும் எனக்கு சான்றிதழ் தர முடியாது’ என்றும் அமீர் நாம் தமிழர் கட்சியின் சமீப கால அரசியல் குறித்து இந்த நேர்காணலில் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
அமீர் பேசியதில் இறுதியாக, `தமிழக அரசியலைப் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் தீர்மானிக்க கூடாது. திமுக எதிர்ப்பு என்ற பெயரில், புலம்பெயர் ஈழத் தமிழர்களின் அரசியல் பாஜக ஆதரவாக மெல்ல மெல்ல மாறி வருகிறது. அதனை ஒருபோதும் ஏற்க முடியாது’ என்று கூறியுள்ளார்.