சோமேட்டோ நிறுவன ஊழியர் தனது வாடிக்கையாளரிடம் இந்தி தெரியாதா? இந்திய இந்தியாவின் தேசிய மொழி என சொல்லியது தேசிய அளவில் பெரும் விவாதம் ஆகியிருக்கும் நிலையில், Zomato நிறுவனத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி எம்.எல்.ஏவுமான வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாபெரும் மொழிப்போர் நடந்த தமிழ் மண்ணில் இந்தியை அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும் என சோமாட்டோ நிறுவனம் கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. தேனீர் கடை முதல் ஒன்றிய, மாநில அரசுப் பணிகள் வரை வடமாநிலத்தவர்கள் நிறைந்து காணப்படுகின்றனர். கிராமம் முதல் சென்னை, கோவை போன்ற பெருநகரங்கள் வரை வட மாநிலத்தவரின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இந்தி மற்றும் பிற மாநிலத்தவர்களின் கட்டுப்பாடற்ற வருகையால், மண்ணின் மக்களுக்கான வேலைவாய்ப்பும், பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
இதன் காரணமாகவே, அரசு அலுவலங்கள் முதல் தனியார் நிறுவனங்கள் வரை மண்ணின் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தமிழர் வாழ்வுரிமை கட்சியை தொடர்ந்து வலியுறுத்தியும், போராடியும் வருகிறது. தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் , உள் அனுமதி விசா வேண்டுமென்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தி வருகிறது.
இதுபோன்ற கட்டுப்பாடுகளற்ற விதிமுறையை உருவாக்காவிட்டால் தமிழ்நாடு அயலார் வேட்டைக்காடாக மாறும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரித்து வருகிறது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை விடுத்தது போலவே, தமிழ்நாட்டுக்கு பிழைப்பு தேடி வந்த நிறுவனங்கள், இந்தி தேசிய மொழி என்றும் அம் மொழியை அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் மண்ணின் மக்களுக்கு வகுப்பு எடுக்கிறது என்றால் எவ்வளவு துணிச்சல்?.
அதாவது, ஆர்டர் செய்த உணவு வரவில்லை என தமிழில் புகார் செய்த இளைஞர் விகாஷ் என்பவரிடம், இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்றும் அதனை அனைவரும் தெரிந்து வைத்திருப்பது அவசியம் எனவும் சோமாட்டோ நிறுவனத்தின் ஊழியர் பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்தி வரும் சோமாட்டோ நிறுவனம், தமிழ் மொழி அறிந்தவர்களை வேலைக்கு அமர்த்தி இருக்க வேண்டும். அதை விடுத்து, அவர்களுக்காக மண்ணின் மக்களை இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும் என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
எனவே, இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடக்காமல் இருக்கும் வகையில், சிறு, குறு தனியார் நிறுவனங்கள் முதல் ஒன்றிய, மாநில அரசு அலுவலகங்கள் வரை மண்ணின் மக்களுக்கான வேலை வாய்ப்புகளை உறுதிப்படுத்தியிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
மேலும், தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்திக் கொண்டு, நமக்கு எதிராகவே செயல்படும் நிறுவனங்களை தமிழர்களாகிய நாம் புறக்கணிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்