ஆட்டுக்குத் தாடி எதற்கு என்று ஆளுநர் பதவியை விமர்சித்தவர்தான் அண்ணா. ஆனால் இன்று முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர், தமிழக பாஜக தலைவர் என அனைவரும் ஆளுநர் மாளிகைக்கு அடுத்தடுத்து விசிட் அடிக்கின்றனர்.


ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தான் ஆளுநரை அணுகும் போக்கு தமிழக அரசியலில் அதிகரித்திருக்கிறதோ என்ற ஐயமும் ஏற்படுகிறது.


ஜெ மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டாகப் பிளந்தபோது, மீண்டும் சமரசம் பேசவும், கூவத்தூர் விவகாரத்தின்போது மத்தியஸ்தம் பேசவும் தமிழக அரசியலில் ஆளுநர் பாலமாக இருந்தார்.  இப்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துவிட்ட நிலையில் ஆளுநர் மாற்றப்பட்டு இப்போது ஆன்.என்.ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், இப்போதும் விட்ட குறை தொட்ட குறை போலத்தான் இப்போதும் ஆளுநர் மாளிகைக்கு படையெடுப்புகள் நடக்கின்றன.


தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி கோயில்களை மட்டும் திறக்காமல் இருப்பதாக புகாருடன் ஆளுநரை சந்தித்தார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. திமுக உள்நோக்குடன் செயல்படுகிறது. திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் என அனைத்திற்கும் அனுமதி கொடுத்துவிட்டு டாஸ்மாக் கூட்டத்தை அனுமதித்துவிட்டு கோயிலுக்கு மட்டுமே அனுமதி மறுப்பதா என்று கேள்வி எழுப்பினார். அந்த சந்திப்புக்கு நடந்ததைத் தொடர்ந்து கோயில்களில் அனைத்து நாட்களிலும் அனுமதி என்ற அரசாணை வந்தது.






அடுத்ததாக தமிழக ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது நீட் தேர்வு விலக்கு குறித்து ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. ஆளுநருடனான சந்திப்பின் போது, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார் என்று கூறப்படுகிறது. ஆனால், கோயில்களை திறக்கக் கோரி பாஜக ஒருபுறம் போராட்டங்கள் நடத்த அதனை வைத்தே ஆளுநருடன் முதல்வர் சந்திப்பு நிகழ்த்தியதாகவும் கூறப்படுகிறது.


இதோ அந்த வரிசையில் இப்போது ஆளுநரை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். நாளை காலை 11 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடைபெறவுள்ளது. தமிழகத்தின் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திவரும் நிலையில் இந்த சந்திப்பானது நடைபெறவுள்ளது. கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி வீடுகளில் நடந்த ரெய்டைத் தொடர்ந்து இப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டிலும் ரெய்டு நடந்துள்ளது. இத்தகைய சூழலில்தான் அதிமுக இணை ஒருங்கிணைப்பாரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்திக்கிறார். இந்த சந்திப்பில் தமிழக அரசியல் குறித்து பேசப்படுவதாகக் கூறப்படுகிறது.


மேலும் அரசியல் வீடியோக்கள் பார்க்க:-