திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குட்டியபட்டியில் ரூ.38 லட்சம் செலவில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. அதில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, கிரகப்பிரவேச வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு சாப்பாடு சரியில்லை எனக் கூறுவது போல் என்டிஏ கூட்டணியில் 9 வருடங்கள் இருந்து விட்டு வெளியே வந்தது தொடர்பாக பாஜக அண்ணாமலை பேசியது குறித்து கேட்ட கேள்விக்கு அவருடைய கட்சியின் கருத்தை அவர் தெரிவித்திருக்கிறார் என்று பதிலளித்தார்.
நாங்கள் ஏன் வெளியே வந்தோம்? என்பதை எடப்பாடி பழனிசாமி தெளிவாக தெரிவித்து இருக்கிறார். திருப்பித் திருப்பி கூற வேண்டிய அவசியம் கிடையாது, ஏன் வெளியே வந்தோம் என தமிழக மக்களுக்கும் அதிமுகவினருக்கும் நன்றாக தெரியும். கர்மவீரர் காமராஜருடன் மோடியை ஒப்பிட்டு அண்ணாமலை பேசியது குறித்த கேள்விக்கு, காமராஜர் யார் மற்றவர்கள் யார் என்பது பொது மக்களுக்கு நன்றாக தெரியும். இது குறித்து நான் கூற வேண்டிய அவசியம் இல்லை.
அயோத்தி கோவில் திறப்பு விழாவிற்கு அதிமுகவுக்கு அழைப்பிதழ் வந்துள்ளது என்பது உண்மைதான். விழாவிற்கு செல்வது குறித்து சூழ்நிலையை பொறுத்து முடிவு செய்யப்படும். வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கும் பாஜகவிற்கும் இடையே தான் கடுமையான போட்டி உள்ளது என அண்ணாமலை கூறியது குறித்து கேட்ட கேள்விக்கு, ஓட்டு எண்ணும் பொழுது தான் எந்த கட்சி எங்கெங்கே உள்ளது என்பது தெரியவரும். கூட்டணிக்கான கதவு திறந்து தான் உள்ளது என அண்ணாமலை கூறியது குறித்த கேட்ட கேள்விக்கு, அவர் யாருக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்பது தெரியாது நாங்கள் பிஜேபி கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டோம் என தெரிவித்தார்.