கேரள சட்டப்பேரவையில் தேவிகுளம் தொகுதியில் வெற்றி பெற்ற ராஜா, தமிழில் உறுதிமொழி கூறி பதவியேற்றுக்கொண்டு அனைவரையும் ஆச்சரிய பட வைத்தார்.
தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்து, மே 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அங்கு இரண்டாவது முறையாக சிபிஎம் தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணி வெற்றி பெற்றது, மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 99 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி 41 தொகுதிகளை மட்டுமே வென்றது.
மீண்டும் பினராயி விஜயனை முதல்வராக்க சிபிஎம் முடிவு செய்தது. அதன்படி, கடந்த 20ஆம் தேதி இரண்டாவது முறையாக கேரள முதல்வராக பினராயி விஜயன் பதவியேற்றுக்கொண்டார். மேலும் 21 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், கேரள சட்டப்பேரவையில் புதிதாக வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதில், இடுக்கி மாவட்டம் தேவிகுளம் எம்எல்ஏ-வாக வழக்கறிஞர் ராஜா, தனது தாய்மொழியான தமிழில் உறுதிமொழி கூறி பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது அங்கிருந்த அனைவருக்கும் இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இடுக்கி மாவட்டத்தில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்வபவர்களில் முக்கால்வாசி பேர் தமிழர்கள் ஆவர். மேலும், இந்த மாவட்டம் தமிழக எல்லையோர பகுதியாக இருப்பதால் தமிழர்கள் மற்றும் மலையாளிகள் கலந்தே உள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தேவிகுளம் தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக வெற்றிபெற்று எம்எல்ஏ ஆகியிருக்கும் ராஜா, இதன் காரணமாகவே தமிழில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டுள்ளார். கேரள சட்டப்பேரவை வரலாற்றில் ஒரு எம்எல்ஏ தமிழில் பதவியேற்றுக்கொண்டது இதுவே முதல்முறையாகும். அவரின் பதவிப்பிரமாண காட்சிகள்தான் சமூகவலைதளங்களில் வைரலாகிறது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில நிர்வாகியான ராஜா, கோவை அரசு சட்டக்கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடிந்துள்ளார்.
ராஜாவை போல கர்நாடக மாநில எல்லையான மஞ்சேஸ்வரம் தொகுதியில் வெற்றி பெற்ற அஷ்ரப் தனது தாய்மொழியான கன்னட மொழியில் உறுதிமொழி கூறி பதவியேற்றுக்கொண்டார்.
மேலும், தமிழில் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட எம்எல்ஏ ராஜவுக்கு மதுரை எம்பி சு. வெங்கடேசன் வாழ்த்து கூறினார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கேரள சட்டமன்றத் தேர்தலில் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தோழர் வழக்கறிஞர் A.ராஜா தனது தாய்மொழியான தமிழில் உறுதிமொழி கூறி பதவியேற்றார். அவருக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளார்.
எந்த மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்கும் போது, அவர்களுக்கான பதவியேற்பு அதிக கவனம் பெறும். அந்த மாதிரியான சூழலில் எம்.எல்.ஏ., ராஜாவின் தமிழ் மொழி பதவியேற்பு இந்த முறை அதிக கவனம் பெற்றுள்ளது.