கடந்த சட்டசபை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சி போட்டியிட்டது. இந்த தேர்தலில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மக்கள் நீதிமய்யம் எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. ஆனால், மாநிலம் முழுவதும் சுமார் 9 லட்சம் வாக்குகளை பெற்றது. இந்த நிலையில், அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் மகேந்திரன், சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ். உள்பட பலரும் கட்சியில் இருந்து விலகினர். கமல்ஹாசன் மீது குற்றச்சாட்டும் வைத்தனர்.
இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக கமல்ஹாசன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, “ஊர் அடங்கினாலும் வாய் அடங்காது என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்றாக நாம் ஆகிவிடக்கூடாது. தோல்வியை ஆராய்ந்து அதில் வெற்றிப்பாடம் கற்பது நாம் இதுவரை கண்ட சரித்திரம். மக்களிடம் முக அறிமகம் இல்லாதவர்களையும், சற்றே தெரிந்தவர்களையும் புது எழுச்சி அரசியலின் நட்சத்திரங்களாக மின்னவைக்க நாம் நினைத்ததுதான் சிலருக்கு சர்வாதிகரமாக தெரிகிறது.
திறமையின் அடிப்படையில் பெரும் பொறுப்புகளை கட்சியில் சேர்ந்தே சில நாட்களிலே தந்து, வளர வழி செய்தது அன்று அவர்களுக்கு ஜனநாயகத்தின் உச்சகட்டமாக தெரிந்தது. பிறகு, காலச்சூழலில் கண்ணுக்கு ஏற்பட்ட மறதியில் அது அவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது.
கூட்டணி வைத்துக் கொள்வதில் நான் காட்டிய வெளிப்படைத் தன்மையும், அதை தேர்ந்தெடுப்பதில் அவர்களுக்கு பொறுப்பு கொடுத்த ஜனநாயகமும் அனைவரும் அறிந்தது. தோல்விக்குப்பின் அவரவருக்கு உள்ள தார்மீக கடமையை ஏற்பது நல்ல ஜனநாயகவாதி செய்யும் செயல். கடமைகளை மறந்து நிகழ்ந்துவிட்ட தவறுகளை கொட்ட ஒரு குழி தேடுவது, சிலருக்கு ஜனநாயகமாகபடுகிறது. அது ஜனநாயகமே அல்ல. நம் மய்ய கிணறு அவ்வளவு சாதாரணமாக தூர்ந்துவிடாது என்பது தற்காலிக சாந்த தாகத்திற்காக குடிக்க வந்தவர்களுக்கு புரியாது. 40 ஆண்டுகாலம் இறைத்து நீர் வார்த்ததில் உடல் சற்று வியர்த்தாலும், உற்சாக ஊற்று ஊறிக்கொண்டே தான் இருக்கும் என்பது நமக்கு நம் அனுபவம் சொல்லும் பாடம்.
இதுதான் நம் புலம். இதுதான் நாம் செய்யப்போகும் விவசாயம் என்று களமிறங்கிவிட்ட நமக்கு நம் நீர்நிலைகளை சுற்றிதான் வேலை. நாடோடிகள், யாத்ரீகள் அப்படி அல்ல ஓரிடம் தங்கமாட்டார்கள். வணிகர்களாக அவர்கள் உள்ள பட்சத்தில் வியாபாரம் உள்ள வரை தங்குவார்கள். சிலநேரம் சென்ற வழியே வருவார்கள். இந்த ஊற்று அன்றும் சுரந்து கொண்டிருக்கும். ஆனால், மீண்டும் நம் ஊரணியை, நீர் நிலையை அசுத்தப்படுத்த விட மாட்டோம் என்ற உறுதியுடன் நாம் நம் பணியை நேர்மையாக தொடர வேண்டும். அதுவே நாம் தரும் செய்தியாக உலகறிய வேண்டும். மற்றபடி, மற்றவர் நம் மீது தரும் பொய் குற்றச்சாட்டுக்கு எந்த பதிலும் சொல்ல வேண்டியதில்லை. காலம் பதில் சொல்லும்.
உண்மை எல்லாம் தெரிந்தும் ஊமையாக இருக்கச் சொல்கிறீர்களா என குரல் எழுப்பும் தொண்டர்களுக்கு, ஒரு வேண்டுகோள். உயிரே! உண்மை பேசு. உறவே! வாதாடு! என் அருமை தமிழே போதும் அதற்கு. மறந்தும் நம் மொழி மாசுபடாது இருக்கட்டும். நம் தரம் குறையாது இருக்கட்டும்.
கட்சியின் உட்கட்டமைப்பை தனி மனிதர்கள் தங்களது ஆதாயத்திற்கு ஏற்ப மாற்றி ஆடிய விளையாட்டுகள் இனி தொடராது. செயல்வீரரகள் மற்றும் செயலாற்றும் வீரர்களின் கரங்கள் இனி வலுப்படுத்தப்படும். உருமாறிய மககள் நீதிமய்யத்தை அனைவரும் இனி பார்ப்பார்கள். நம் கொள்கையில் என்றும் ஒரு தெளிவும், பாதையில் ஒரு நேர்மையும் இருப்பதால் நம் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது. என் உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன். அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யமும் இருக்கும்” என்று பேசியுள்ளார்.