விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு கடந்த ஆட்சியில் பிப்ரவரி மாதம் தேர்தல் அறிவிக்கும் நேரத்தில் திருவள்ளுவர் பல்கலை ஏற்ற இரண்டாக பிரித்து விழுப்புரம் தலைமையிடமாகக் கொண்டு ஜெ ஜெயலலிதா பல்கலைகழகம் இயங்கும் என அறிவித்து பின்னர் தேர்தல் தேதி அறிவித்து கொண்டிருக்கும் போதே அந்த சில நிமிடங்களுக்கு முன்பாக  அப்பொழுது அவசரமாக விழுப்புரம் பழைய தாலுகா அலுவலக கட்டிடத்தில் டாக்டர். ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் என்று பெயர் பலகை வைத்து திறக்கப்பட்டது. இடம் தேர்வு செய்யவுமில்லை, நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு மாதம் கடந்துவிட்டன. இந்நிலையில் கடந்த வாரம் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார்.




இந்நிலையில் கடந்த அதிமுக அரசு அறிவித்த டாக்டர். ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும், அதனை முடக்கக் கூடாது என்று கூறி இன்று விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் முன்பாக விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சக்கரபாணி, அர்ஜுனன், செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் டாக்டர்.ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் முடக்க கூடாது என்று கோரி அதிமுகவினர் கையில் பதாகை ஏந்தி முழக்கமிட்டனர்.




 


ஆர்ப்பாட்டத்தில் பேசிய சி.வி சண்முகம்,‛ ஜெயலலிதா என்ற பெயர் தான் பிரச்சனை என்றால் அந்த பெயரை மாற்றி விட்டு கூட, வேறு எந்த பெயரில் வேண்டுமானாலும் பெயர் வைத்து பல்கலைக்கழகத்தை தொடர்ந்து நடத்த வேண்டும்,’ என பேசினார்.


ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை செயல்படுத்தக்கோரி சி.வி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு: 


விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை மூட முயற்சிகள் நடப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறிவந்தார். இந்நிலையில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யவும், பதிவாளரை நியமிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.




அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவர்களின் நலனுக்காக, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தைப் பிரித்து, விழுப்புரத்தைத் தலையிடமாகக் கொண்டு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. துணைவேந்தர் நியமிக்கப்பட்டு, பல்கலைக்கழக கட்டுமானத்திற்காக விழுப்புரம் மாவட்டம், செம்மேடு கிராமத்தில், 70 ஏக்கர் நிலம் அதிமுக அரசால் ஒத்துக்கப்பட்டது. நிலம் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போதைய அரசின் புறக்கணிப்பால் பல்கலைக்கழகம் இன்னும் பழைய தாலுக்கா அலுவலகத்தில் செயல்படுகிறது. இதுவரை பல்கலைக்கழகத்திற்குப் பதிவாளரும், போதுமான பணியாளர்களும் நியமிக்கப்படாததால், பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அதன் முதுகலை மையத்தில் முதுகலைப் படிப்பில் சேர விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது சட்டத்தை மீறிய செயல். அந்த அறிவுப்புக்குத் தடை விதிக்கவேண்டும்” என மனுவில் கோரியுள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரவுள்ளது.