சட்டப்பேரவை தோல்விக்கு பிறகு முதன்முறையாக டெல்லிக்கு சென்றுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தனர்
நேற்று காலை 10.50 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு தனது மருகன் காசி விஸ்வநாதன், எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் சகிதமாக சென்றார் ஒபிஎஸ். ஒபிஎஸ் டெல்லி சென்றது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இரவு 9.30 மணிக்கு கோவையில் இருந்து டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி, இவருடன் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இருந்த தளவாய் சுந்தரம் ஆகியோரும் இணைந்து சென்றனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கட்டடத்தில் பிரதமர் மோடியை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் சந்தித்தனர்.
கூடுதலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு இருமுறை டெல்லி சென்று, குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரை சந்தித்து நீட், மேகதாது அணை விவகாரம், எட்டு வழிச்சாலைத் திட்டம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்திய நிலையில், ஒபிஎஸ் – ஈபிஎஸ் இருவரும், இதே நீட், காவிரி விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களுக்கு தீர்வு காணும்படி கோரிக்கை மனுக்களை அதிமுக சார்பில் அளிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல், நாடாளுமன்ற எம்.பிக்களுக்கு டெல்லியில் வீடு ஒதுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக வீடுகள் தரப்படாமல் இருந்தது, இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நட்சத்திர ஓட்டலில் தங்கி வந்தனர். இந்நிலையில், தற்போது அவர்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஒபிஎஸ் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத்துக்கும் புதிதாக டெல்லி நிர்மண் பவனில் உள்ள மீனா பவனில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் இன்று பால் காய்ச்சும் நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், இதிலும் ஒபிஸ் பங்கேற்கவுள்ளார்.