நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் சந்திரசேகர் காங்கிரஸ் கட்சியின் 15 வட்டார தலைவர்கள், மாநில நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறும்போது,  "கடந்த 15 ஆம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ்  தொண்டர்களிடையே அடிதடி, தள்ளுமுள்ளு நடந்தது. அதற்கு முழுக்க முழுக்க காரணம் தமிழ்நாடு மாநில  காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தொண்டனை கன்னத்தில் அடித்ததே.. அதன் பின் தான் மோதல்கள் வெடித்தது. நாங்கள் வட்டாரத்தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து  எங்களுக்குள் ஆதரவாளர்களை திரட்டி சென்றோம். ஆனால் இதற்கு நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் தான் காரணம் என பொய்யான பிரச்சாரம் தெரிவித்தார்கள். அது கிடையாது, அவருக்கும் இந்த பிரச்சினைக்கும்  எந்த சம்பந்தமும் கிடையாது. நாங்கள் தொண்டர்களை அழைத்து நியாயம் கேட்க சென்ற இடத்தில் கே. எஸ். அழகிரி எங்களை ஒரு பொருட்டாக மதிக்காமல், எங்கள் தொண்டனை கன்னத்தில் அடித்த காரணத்தினால் விளைந்த விளைவுகள் தான் இவை அனைத்தும்.. 


இதுதொடர்பாக ரூபி மனோகரன் உடனே எங்களை அழைத்து கண்டித்து நீங்கள் பிரச்சினை செய்தால் எனது தொகுதிக்கு தான் கெட்ட பெயர். ஆகவே எனது பேச்சை கேளுங்கள் என்று பலமுறை கூறி அனைவருக்கும் ஆதரவு கூறி அனுப்பி வைத்தார். இந்த பிரச்சினைக்கும் ரூபி மனோகரனுக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. நெல்லையில் இருந்து சென்ற தொண்டர்களை அடியாட்களை வைத்து அடித்தார்கள். அடியாட்களுக்கு 2 ஆயிரம் சம்பளம் கொடுத்து கலவரத்தை தூண்டி விட்டார்கள். கட்சியின் நிலவரம் இப்படி சென்றால் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியும் இருக்காது, கட்சியில் பணி செய்யவும் மாட்டார்கள். ஆகவே கட்சியை ஒருங்கிணைத்து செல்லக்கூடிய மாநில தலைவரும் வேண்டும். தொண்டர்களை அரவணைத்து செல்லும் மாவட்ட தலைவர்களும் வேண்டும். எனவே மாநில தலைவரை உடனே மாற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை. அதே போல மாவட்ட தலைவரையும் மாற்ற வேண்டும். இப்படிபட்ட தலைவரைகளை நாங்கள் விரும்பவில்லை, தொண்டர்கள் விரும்பவில்லை. இவர்களை உடனடியாக நீக்கி புதிய தலைவர்களை நியமிக்க  வேண்டும்.




இந்த பிரச்சினைக்காக நாங்கள் உட்கட்சிக்கு விரோதமாக செயல்படமாட்டோம்.  கட்சிக்கு வலியுறுத்துவோம், போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவை நடத்துவோம். இதுதொடர்பாக அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  வரும் 24 ம் தேதி சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி நடத்தும் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்களையும், அழைத்து விசாரணை  நடத்த வேண்டும். அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும். 12 வட்டார தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியில் தேர்தல் நடத்தாமலேயே தற்போது வட்டார தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். காங்கிரஸ் கட்சிக்கு சம்பந்தம் இல்லாமல் இருப்பவர்களிடம் அதிகமாக பணம் கொடுத்து உள்ளதால் அவர்கள் வட்டார தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். இது தொடர்பாகவும் நாங்கள் மேல் இடத்தில் புகார் தெரிவிக்க உள்ளோம். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு தற்போது நெல்லை மாவட்டத்தில் பதவி வழங்கப்பட்டுள்ளது நாங்கள் வன்மையாக கண்டனம் தெரிவிக்கிறோம்" என தெரிவித்தனர்.