18 வயது நிரம்பிய அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த வேண்டும், நாள்தோறும் ஒரு கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.


சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை கூறியதாவது, “காங்கிரஸ் கட்சி இடைக்கால தலைவர் சோனியா காந்தி, 18 வயது நிரம்பிய அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட வேண்டும் என மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதனை வலியுறுத்தி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் காங்கிரஸ் கட்சி சார்பாக மனு அளிக்கப்பட உள்ளது. இதற்காக ஆளுநரை சந்திக்க நேரம் கோரி உள்ளோம், அனுமதி கிடைத்ததும் அவரை சந்திப்போம். அதே போல மாவட்ட நீதிபதிகளிடம் மனு கொடுக்க உள்ளோம். 




தற்போது நாள் ஒன்றுக்கு 14 லட்சம் தடுப்பூசி தான் போடப்படுகிறது. இந்த வேகத்தில் தடுப்பூசி செலுத்தினால், அனைவருக்கும் தடுப்பூசி போட 3 ஆண்டுகள் ஆகும். இதனை கருத்தில் கொள்ளாமல் மத்திய அரசு தடுப்பூசியை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. இதுவரை 6 கோடி தடுப்பூசியை ஏற்றுமதி செய்துள்ளது.


தடுப்பூசி பற்றாக்குறை: கட்டுக்கதையை உடைப்பதாக அறிக்கை விட்ட மத்திய அரசு! விபரம் என்னவோ பழசு!


தற்போது தமிழகத்தில் தடுப்பூசிக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.  இதற்கு முன் தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்களுக்கு அச்சம் இருந்தது. இப்போது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால், தடுப்பூசி கிடைக்கவில்லை" என்றார்.


மேலும், மத்திய அரசை, ஒன்றிய அரசு என்றே அழைக்கலாம், அதில் தவறில்லை. அரசியலமைப்பு சட்டத்தை சிதைப்பவர்கள் தான் அது குறித்து கவலைப்பட வேண்டும் என செல்வப் பெருந்தகை கூறினார்.


நாட்டு மக்கள் அனைவருக்கும் தினமும் 1 கோடி தடுப்பூசிகள் வீதம் இலவசமாகச் செலுத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள நேற்று செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டிற்கு கடந்த ஜூன் 2ஆம் தேதி வரையில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், வரும் 15ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் 18.36 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு விலையில்லாமல் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், தமிழக அரசிடம் 7.24 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்படாமல் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் தடுப்பூசிகள் தயாரிக்கும் பணியை தீவிரப்படுத்துவதற்காக மாநில அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல். தடுப்பூசி ஆலையை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அந்த ஆலையில், உடனடியாக தடுப்பூசி தயாரிக்கும் பணியை தொடங்க வேண்டும் என்றும் மத்திய அரசை மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 


தமிழ்நாட்டுக்கு ஜூன் மாதத்தில் 18.36 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்படும் - மத்திய அரசு