காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர் ப.சிதம்பரம். இவரது மகன் கார்த்தி சிதம்பரம். மக்களவை உறுப்பினரான இவர் மீது சீனாவில் இருந்து இந்தியா வந்தவர்களுக்கு முறைகேடாக விசா பெறுவதற்கு இவரது நிறுவனம் உதவியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சி.பி.ஐ. சார்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.
டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. 2வது நாளாக இந்த வழக்கு விசாரணைக்காக இன்று ஆஜராகியுள்ளார். இந்த நிலையில், சி.பி.ஐ. பொய் வழக்கு தொடர்ந்திருப்பதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார். அதில், “நாடாளுமன்ற குழு உறுப்பினர் என்ற முறையில் நான் எழுதி வைத்திருந்த குறிப்புகள் அடங்கிய பொருட்களுக்கு சி.பி.ஐ. சீல் வைத்துள்ளது. சி.பி.ஐ. பொய் வழக்கு தொடர்ந்துள்ளனர். நாடாளுமன்றத்தில் எனது செயல்பாடுகளை தடுக்க சி.பி.ஐ. நினைப்பது ஜனநாயக மாண்புகள் மீதான தாக்குதல்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நேற்றையை தினம் கார்த்தி சிதம்பரத்திடம் சி.பி.ஐ. 10 மணிநேரம் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு தொடர்பாக, ஏற்கனவே கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் ரூபாய் 50 லட்சம் லஞ்சமாக வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்