காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். இவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 






காங்கிரஸ் கட்சியின் மிகவும் முக்கியமான தலைவரான குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக அறிவித்திருப்பது அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்து வருகிறது. 2014ம் ஆண்டு பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த பிறகு மாநிலங்களிலும் தங்களது ஆட்சியை வலுப்படுத்த தொடங்கியது. இதனால், காங்கிரஸ் கட்சியின் பலம் மாநிலங்களில் மிகவும் குறைந்தது. மேலும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்தது.


காங்கிரஸ் கட்சியில் தலைமை மீதான அதிருப்தியில் பலரும் இருந்து வந்த நிலையில், தலைமைக்கு எதிராக நாட்டின் மிகவும் முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் 23 பேர் கடிதம் எழுதினார். அந்த தலைவர்களுக்கு குலாம் நபி ஆசாத் தலைமை தாங்கினர். அதுமுதல் சோனியாகாந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கும் குலாம் நபி ஆசாத்திற்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டதாகவே கருதப்படுகிறது. இந்த நிகழ்விற்கு பிறகு, குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தனர்.


மேலும், காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை வகித்த அவருக்கு காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இது அவருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடத்தப்பட்ட சிந்தனையாளர் கூட்டத்திற்கு குலாம்நபி ஆசாத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.


சமீபத்தில் டெல்லி சென்று சோனியாகாந்தியை சந்தித்த குலாம் நபி ஆசாத்திற்கு அந்த பேச்சுவார்த்தையிலும் அதிருப்தி ஏற்பட்டதாகவே கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்றத்திற்கான தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்கான காஷ்மீர் மாநில பிரசாரக்குழு தலைவராக குலாம்நபி ஆசாத் நியமிக்கப்பட்டார். தேசிய அளவில் மிகப்பெரிய தலைவரான தன்னை மாநில அளவில் நியமிக்கப்பட்டதால் கடும் அதிருப்தியடைந்த குலாம் நபி ஆசாத் கட்சித் தலைமை அறிவிப்பு வெளியிட்ட சில மணி நேரங்களிலே தன்னுடைய பிரசாரக்குழு தலைவர் மற்றும் மாநில விவகாரக்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.