தருமபுரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரைசிங் யூத் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் கமிட்டியின் இளைஞரணி தலைவர் லெனின் பிரசாத் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த லெனின் பிரசாத்,
அண்ணாமலை அரசியல் நாகரிகம் இல்லாதவர்
பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் நாகரிகம் இல்லாமல் தலைவர்களைப் பற்றி விமர்சனம் செய்து வருகிறார். ஜனநாயக வரம்பை மீறி தனி மனித தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகிறார். இதை எதிர்க்கட்சிகள் மட்டும் சொல்லவில்லை. முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பாஜகவினரின் சுட்டிக் காட்டியுள்ளனர்.
தனி நபர் தாக்குதலை நிறுத்திக்கொள்ள வேண்டும்
அண்ணாமலை ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அவர் தலைக்கனத்தின் உச்சத்தில் இருந்து வருகிறார். அதற்கு தான் இந்திய மக்கள் கடந்த தேர்தலில் சவுக்கடி கொடுத்தார்கள். அதை அண்ணாமலை புரிந்து கொண்டு தனி நபர் மீதான தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அவதூறு பரப்பும் நாம் தமிழர் கட்சியை சார்ந்தவர்கள் கைது செய்ய வேண்டும்
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நாம் தமிழர் கட்சி ஒருங்கிடைப்பாள் சீமான் அநாகரிகமாக பேசி வருகிறார். நாம் தமிழர் கட்சியை சார்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பி வருகின்றனர். சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கின்றோம்.
ஒன்றிய அரசு தமிழகத்திற்கு எஸ் எஸ் ஏ திட்டத்திற்கு மட்டும் பணம் ஒதுக்குவதை நிறுத்தவில்லை. இந்தியா கூட்டணி எங்கெங்கெல்லாம் ஆட்சி செய்கிறதோ, வலுவாக இருக்கிறதோ, கேரளா, தமிழ்நாடு போன்ற வலுவாக இருக்கின்ற மாநிலங்களுக்கு நிதியை ஒதுக்கவில்லை. பாஜக ஆட்சி அமைவதற்கு காரணமாக இருக்கின்ற பீகார், ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு மட்டும் நிதி ஒதுக்கி உள்ளனர். தங்களது ஆட்சி நிலைப்பதற்காக இரண்டு மாநிலங்களின் தயவு வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு சோப்பு போடும் வகையில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி ஆட்சியை தக்க வைப்பதற்கான வேலையை செய்து வருகிறார்கள்.
நம்முடைய வரிப் பணம் பல்லாயிரம் கோடியை அந்த இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் ஒதுக்கி இருக்கிறார்கள். இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், கூடிய விரைவில் இந்த ஆட்சி களையும் இந்தியா கூட்டணி ஆட்சி விரைவில் அமையும். அன்று தமிழக மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் சமமாக பார்க்கப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு நாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்த்து வருகிறார். தற்போது அவர் செல்லக்கூடிய வெளிநாட்டு பயணம் கூட தமிழ்நாட்டிற்கு ஒரு எழுச்சியாக தான் இருக்கும் என்று நினைக்கின்றோம்.
பாஜக தொடர்ந்து எதிர்க்கட்சிகளுக்கு மிரட்டல் கொடுத்து தான் வருகிறது. அவர்களது கூட்டணிக்கு வர வைப்பதற்கும், அவர்களது கட்டுப்பாட்டில் இருப்பதற்குமே எதிர்க்கட்சிகளை மிரட்டி வருகிறது. பாஜகவினர் புதிதாக அந்த இயக்கத்திற்கு தலைவர்களை உருவாக்க மாட்டார்கள், வேறு இடத்தில் இருக்கின்ற தலைவர்களை இழுக்க பார்ப்பார்கள். அப்படி இல்லையென்றால் அவர்களுக்கு இ டி, ஐ டி போன்றவற்றை ஏவி விட்டு அச்சுறுத்த வருகிறார்கள். இதற்கெல்லாம் பயந்து ஒரு சிலர் பாஜகவிற்கு செல்கிறார்கள். இதற்கெல்லாம் அசராமல் எத்தனையோ தலைவர்கள் ஜனநாயகம் பாதுகாக்க இருந்து வருகிறார்கள்.
இது பாஜக செய்கின்ற வேலைதான் புதிதாக ஒன்றும் இல்லை. வேறு ஒருவருடைய பிள்ளைக்கு இவர்கள் பெயர் வைத்துக்கொள்ள நினைப்பார்கள். இனிஷியல் போட நினைப்பார்கள் இதற்கெல்லாம் விரைவில் ஒரு முற்றுப்புள்ளி வரும் என்று எதிர்பார்க்கின்றோம்.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தமிழக மக்களின் உரிமைக்காக போராடுவோம். மேகதாது அணை கட்டுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இதற்காக கர்நாடக அரசை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும், இளைஞர் காங்கிரசும் தொடர்ந்து போராடும். மேலும் கர்நாடக மாநில நடவடிக்கை குறித்து தேசிய தலைமைக்கு, மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு மாநில உரிமைகள் குறித்து ஏற்கனவே கடிதம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் பாஜக தமிழ்நாடு கர்நாடகாவுக்கிடையே காவிரி பிரச்சனை இருக்கின்ற நிலையில், மத்திய ஜல் சக்தி துறையை கர்நாடகவை சார்ந்தவருக்கு ஒதுக்கி இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் ஒரு தலை பட்சமாக செயல்படாது எல்லோருக்கும் பொதுவான வகையில் தான் இருப்போம் என தெரிவித்தார்.