நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தித் திணிப்பு நடைபெறுவதாக கூறி மத்திய அரசுக்கு எதிராக திமுக சார்பில் நடபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.


”தொகுதிகளின் எண்ணிக்கை 31 ஆக குறைந்துவிடும்”


நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் இந்தித் திணிப்பு என்று தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு, மத்திய அரசு எதிராகச் செயல்படுவதாக, மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்கிற திமுக சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் கூட்டத்தில், திருவள்ளூரில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.


அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது “ அநாகரிகமாக பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை அரை மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வைத்துள்ளோம். அநாகரிகத்தின் அடையாளமே, பாஜகதான். தொகுதி மறுசீரமைப்பு என்கிற கத்தி தென் மாநிலங்கள் மீது தொங்கிக் கொண்டிருக்கிறது. தொகுதி மறுசீரமைப்பு வந்தால், தமிழ்நாட்டில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 31 ஆக குறைந்துவிடும்.


உங்களுக்கு என்ன பிரச்னை


என்றும் மக்களுக்கான குரலாக ஒலிப்போம்; வாதாடியும், போராடியும் நம்முடைய உரிமைகளை நிலைநாட்டுவோம்.தமிழ்நாடு என்ன பிச்சைக்கார மாநிலமா, நாங்கள் உழைத்து வரியை செலுத்திய பணத்தில் இருந்து எங்களுக்கு நிதியை தருவதில் உங்களுக்கு என்ன பிரச்னை , மாணவர்களின் நலனுக்கான நிதியை கொடுக்காமல் இருப்பது நியாயமா.


இது தேசிய கல்விக் கொள்கை அல்ல. காவிக் கொள்கை, இது இந்தியாவை வளர்வதற்காக கொண்டுவரப்பட்டவை அல்ல, இந்தியை வளர்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட கொள்கைபாஜகவின் பாசிச நடவடிக்கைகளுக்கு உயிரே போனாலும் அடி பணிய மாட்டோம் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.


துணை நிற்பது கடமை:


தொடர்ந்து பேசுகையில், ஒரு மாநில அரசு நாட்டிற்கே எடுத்துக்காட்டாக இருந்தால், அந்த மாநில அரசுக்கு துணை நிற்க வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால், பாஜக அரசு தமிழ்நாடு தலைநிமிர்ந்து நடைபோடுகிறதே என்ற பொறாமையோடு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் திமுக காவலாக இருக்கிறதே என்ற எரிச்சலோடு இருக்கிறது. மத்திய அரசு நம்மை சிறுமைப்படுத்தப் பார்க்கிறது. பதவி சுகத்திற்காக மத்திய அரசிடம் பணிந்து போகும் முதுகெலும்பில்லாத அடிமைக் கூட்டமல்ல நாம் .


முதலமைச்சர் ஸ்டாலின் உறுதிமொழி:






இதனை தொடர்ந்து, தமிழ்நாட்டின் உரிமையை விட்டுத்தர மாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி எடுத்தார்.