புதுச்சேரி: புதுச்சேரியில் 21 வயது முதல் 55 வயது வரை உள்ள எந்தவிதமான உதவித்தொகையும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ரூபாய் 1000 உதவித்தொகை, ரூபாய் 2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டபேரவையில் 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். புதுச்சேரி மாநிலத்தின் 2025-2026ம் நிதி ஆண்டிற்கான ரூ.13,600 கோடிக்கான முழு பட்ஜெட்டினை முதல்வர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார். புதுச்சேரி சட்டசபையின் கூட்டத் தொடர் நேற்றுமுன்தினம் கவர்னர் உரையுடன் துவங்கியது.
தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின்போது முதல்வர் பேசுகையில், “புதுச்சேரியில் ரேஷன் கடைகளில் இலவச அரிசியுடன் 2 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படும். ரேஷன் அட்டைகளில் புதியதாக பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி சேர்த்தல் ஆகியவை இணையதளம் முலம் மக்கள் சரிசெய்ய வழிவகை செய்யப்படும். புதுச்சேரியில் மதிய உணவு திட்டத்தில் இனி அனைத்து நாட்களும் முட்டை வழங்கப்படும்.
புதுச்சேரியில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். புதுச்சேரியில் புதிதாக கட்டப்பட உள்ள இசிஆர் பேருந்து நிலையத்துக்கு வாஜ்பாய் பெயர் சூட்டப்படும். இசிஎஸ் பேருந்து நிலையத்துக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கான உதவித் தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.2500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மத்திய சிறையில் ஏழை சிறை கைதிகள் நலத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். ஏழை சிறை கைதிகள் நலத்திட்டத்தின் மூலம் ஏழை கைதிகளுக்கு தேவைப்படும் சட்ட உதவி செய்யப்படும் புதுச்சேரியில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வரும் ஆண்டு முதல் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். “புதுச்சேரியில் உள்ள 2 அருங்காட்சியகங்கள் மத்திய அரசின் உதவியுடன் புனரமைக்கப்படும்.
எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.1 கோடியில் இருந்து ரூ.2 கோடியாக உயர்தப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் சுற்றுலாத் துறை சார்பில் பொங்கல் பொருட்காட்சி விழா நடத்தப்படும். 30 வயது கடந்த திருமணம் ஆகாத, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.3000 வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் உயிரிழந்தால் ஈமச்சடங்கிற்காக வழங்கப்படும் நிதி ரூ.25,000ஆக உயர்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.