தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக தினசரி 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆக்சிஜன் சிலிண்டர்கள் அதிகரிப்பு, ஐ.சி.யு. படுக்கைகள் அதிகரிப்பு, சாதாரண வார்டுகள் அதிகரிப்பு உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தமிழகத்தில் கடந்த 10-ந் தேதி முதல் அமலில் உள்ள ஊரடங்கு, கடந்த 24-ந் தேதி முதல் எந்த தளர்வும் இல்லாத ஊரடங்காக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு வரும் 7-ஆம் தேதி வரை தமிழகத்தில் அமலில் இருக்கவுள்ளது.


இந்த நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று நேரில் ஆய்வு செய்து வருகிறார். இந்த வகையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா பாதிப்பு தற்போது தமிழகத்தில் அதிகளவில் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு இன்று நேரில் சென்றார். அப்போது, கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளை கொரோனா பாதுகாப்பு கவச உடை அணிந்து நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். இதுதொடர்பாக, தான் ஏன் கொரோனா வார்டுக்கு சென்றேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். 






கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை  பி.பி.இ. கிட் அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும். தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும்!






வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன்! இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம்!என்று பதிவிட்டுள்ளார்.