வெள்ள நிவாரணத்துக்கு கூட பணம் தராமல் இரக்கமற்ற ஆட்சியை நடத்தி வரும் பிரதமர் மோடிக்கு திமுகவை குறை கூற தகுதியில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு 2 நாட்கள் வந்திருந்தார். அப்போது நடந்த பொதுக்கூட்டத்தில் திமுகவையும், தமிழ்நாடு அரசையும் விமர்சித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் மறைக்கப்படுவதாக கூறினார். இதற்கு திமுக அமைச்சர்கள், எம்.பி.,க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான அறிக்கையில், “
தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்கி இருக்கிறார் பிரதமர் மோடி. தோல்வி பயம் அவர் முகத்தில் தெரிகிறது. அந்தக் கோபத்தைத்தான் அவரது முகம் காட்டுகிறது. தி.மு.க.வைப் பற்றியும், கழக அரசைப் பற்றியும் அவதூறுகளை அள்ளி வீசி இருக்கிறார் பிரதமர். அவர் கொண்டு வந்த திட்டங்களுக்கு நாம் தடை போடுகிறோமாம். எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தார், எதற்கு நாம் தடையாக எப்படி இருந்தோம் என்று பட்டியல் போட்டிருந்தால் பதில் சொல்ல வசதியாக இருக்கும்.ஆனால், ஒரு மாநில அரசுக்குத் தர வேண்டிய நிதியையும் தராமல், கடன் வாங்க நினைத்தால் அதையும் தடுத்து, வெள்ள நிவாரணத்துக்குக் கூட பணம் தராமல் இரக்கமற்று ஒரு அரசாட்சியை நடத்தி வரும் மோடி அவர்களுக்கு தி.மு.க.வைக் குறை சொல்ல எந்தத் தகுதியும் இல்லை.
தி.மு.க.வை ஒழித்து விடுவேன், இல்லாமல் ஆக்கிவிடுவேன் என்று, தான் வகிக்கும் பதவியைத் தாழ்த்தும் வகையில் பேசி இருக்கிறார் பிரதமர். தி.மு.க.வை அழிப்பேன் என்று கிளம்பியவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் தமிழ்நாட்டு அரசியல் வரலாறு.அவரது பாணியில் பா.ஜ.க.வே இருக்காது என நான் சொல்ல மாட்டேன். எங்களைத் தலைவர் கலைஞர் அப்படி வளர்க்கவில்லை. ஜனநாயகக் களத்தில் நின்று ஒரு கட்சி எப்படிச் செயல்பட வேண்டுமோ அப்படிச் செயல்படும் உரிமை பா.ஜ.க.வுக்கு உண்டு. கடந்த காலத்தில் நல்ல ஆளும் கட்சியாக இருக்கத் தெரியாத பா.ஜ.க., வருங்காலத்தில் நல்ல எதிர்க்கட்சியாகவாவது இருக்கட்டும் என நான் வாழ்த்துகிறேன்.
இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் 'இந்தியா' கூட்டணிக்கட்சித் தலைவர்கள் தங்களது பணிகளைச் சிறப்பாகத் தொடங்கி விட்டதாகச் செய்திகள் வருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் 'இந்தியா' கூட்டணிக் கட்சிக் கட்சிகளை பா.ஜ.க. தொல்லை செய்து வருவதைப் பார்க்கும்போது நம்முடைய அணியின் வெற்றி அகில இந்தியா முழுமைக்கும் உறுதியானதாகவே உணர முடிகிறது” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.