தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. அவரது பிறந்தநாளை தி.மு.க.வினர் பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். ஆண்டுதோறும் தன்னுடைய பிறந்தநாளன்று மு.க.ஸ்டாலின், தேனாம்பேட்டையில் உள்ள சிறுமலர் பள்ளிக்கு சென்று மாணவர்களை சந்தித்து அவர்களுடன் கொண்டாடுவது வழக்கம்.


பிறந்தநாள் கொண்டாட்டம்:


இந்த நிலையில், நாளை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதால் இன்றே மு.க.ஸ்டாலின் சிறுமலர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் இணைந்து விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த பள்ளி மாணவர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார்.




பின்னர், அவர்களின் கண்கவர் நிகழ்ச்சிகளையும், விழாவையும் கண்டு களித்தார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்திருந்த நாற்காலியின் அருகிலே அதே பள்ளியில் படிக்கும் மாணவரையும், மாணவியையும் மு.க.ஸ்டாலின் தனது இருக்கைக்கு அருகில் அமரவைத்தார்.


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “ பிறந்தநாள் என்று வந்தாலே நீண்டநேரம் இருந்து உங்கள் கலைநிகழ்ச்சிகளை நான் பெற முடியாத சூழ்நிலை. அதன் காரணமாகத்தான் முன்கூட்டியே நான் வந்து உங்கள் கலைநிகழ்ச்சிகளையும், அன்பையும், வாழ்த்தையும் பொறுமையாக பெற்றுச் செல்ல வந்துள்ளேன்.


வியப்பு:


எனக்கு 70வது பிறந்தநாள் நாளை பிறக்கிறது. 70 வயதா? என்று ஆச்சரியப்படும் அளவிற்கு உள்ளது. நான் பல நேரங்களில் சொல்வது உண்டு. வருடத்திற்கு 2 அல்லது 3 முறை பிறந்தநாள் வரக்கூடாதா? வருடத்திற்கு 3 முறை உங்களை வந்து பார்க்கலாமே? அந்த வாய்ப்பு கிடைக்குமே என்று பலமுறை நான் பேசியது உண்டு. அப்படி இருந்தால் வயது அதிகமாகிக் கொண்டே இருக்கும்.


உங்களைச் சந்திக்கும்போதெல்லாம் எனக்கு ஒரு வித உணர்வு. நீங்கள் எனக்கு வாழ்த்து சொன்னபோது வாழ்த்து மட்டுமின்றி, ஏறக்குறைய 22 மாதங்களாக நடந்து கொண்டிருக்கக்கூடிய நமது ஆட்சி, இதை நான் என் ஆட்சி என்று கூறமாட்டேன். நமது ஆட்சி, உங்கள் ஆட்சி. அந்த ஆட்சியில் செய்து கொண்டிருக்கும் சாதனைகளை எல்லாம் நீங்கள் பட்டியலிட்டீர்கள்.  இவ்வளவு செய்துள்ளோமா? என்று எனக்கே வியப்பாக உள்ளது. அதை எல்லாம் நினைவில் வைத்துக்கொண்டு, நாங்கள் மறந்தாலும் நீங்கள் மறக்காமல் அதை சுட்டிக்காட்டினீர்கள்.





30 ஆண்டுகளாக வருகை:


அதை நான் எப்படி கருதுகிறேன் என்றால் இன்னும் செய்ய வேண்டும். இன்னும் எங்களின் பாராட்டை நீ பெற வேண்டும் என்று நீங்கள் சொல்வதாக நான் கருதுகிறேன். அப்படிப்பட்ட ஆட்சியை உங்களின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு நடத்திக் கொண்டிருக்கிறோம்.  நான் இந்த பள்ளிகளுக்கு வரும்போது பல பொறுப்புகளில் இருந்து வந்து கொண்டிருக்கிறேன். 30 வருடங்களாக அதாவது 1984ம் ஆண்டு முதல் வந்து கொண்டிருக்கிறேன்.


எம்.எல்.ஏ.வாக, சென்னை மேயராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக இருந்தபோது வந்திருக்கிறேன். ஆட்சியில் இல்லாத நேரத்திலும் வந்திருக்கிறேன். எதிர்க்கட்சியாக இருந்தபோதும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் வந்திருக்கிறேன். இனறு முதலமைச்சராக வந்திருக்கிறேன். ஒன்றை மட்டும் உறுதியாக சொல்கிறேன்.


மகிழ்ச்சி:


எந்த பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் வருடந்தோறும் இங்கு வருவேன். அந்த பாசம் உங்களுடன் ஒன்றியுள்ளது. நான் எத்தனை பொறுப்புகளில் இருந்தாலும், எத்தனை நிகழ்ச்சிகளுக்கு போனாலும் அது அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும், பொதுவான நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் கிடைக்கும் பெருமை, மகிழ்ச்சியை விட சிறுமலர் பள்ளிக்கு வரும்போதுதான் அதிகமான மகிழ்ச்சியை பெறுகிறேன்.


நீங்கள் தந்துள்ள உற்சாகத்தை, வாழ்த்துகளை, நம்பிக்கையை மனதில் வைத்துக்கொண்டு என்றைக்கும் உங்களுக்காக பணியாற்ற காத்திருக்கிறேன். உங்கள் வாழ்த்துகளுக்கு ஈடு இணை ஏதுமில்லை. ஈடு இணையற்ற உங்கள் வாழ்த்துகளை பெற்ற நான் இதயபூர்வமான நன்றியை தெரிவிக்கிறேன்.”


இவ்வாறு அவர் பேசினார்.