பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகியான குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நேற்று நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று அவர் பதவியேற்றுக்கொண்டார். இது பற்றி தனது ட்விட்டர், “எனது தலைவர் நரேந்திர மோடியின் மற்றும் ஷர்மரேகா ஆகியோரின் நல்லாசியுடன் இந்த பெரிய பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். எங்கள் தேவிகளின் நலன்கள் எல்லாத் துறைகளிலும் பாதுகாக்க உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் ஆதரவும் வேண்டும்” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினராக நடிகை குஷ்பு பொறுப்பு வகித்தார். இந்நிலையில் குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நேற்று நியமனம் செய்யப்பட்டார். இது குறித்து குஷ்பு “தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை, பெண்களுக்கான சுயமரியாதையின்மை ஆகியவற்றை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். அந்த வகையில் தற்போது எனக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பெண்கள் யாரும் பயப்பட வேண்டாம். நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் போராடுவோம். திமுக நிர்வாகி ஒருவர் பாஜகவில் உள்ள பெண்களை பற்றி மிகவும் அவதூறாக பேசியிருந்தார். அவர் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்தேன். அந்த நபர் தேசிய மகளிர் ஆணையத்திலேயே மன்னிப்பு கேட்டார்”, என குறிப்பிட்டிருந்தார்.
குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பொருப்பேற்றதற்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதில் ” இது அவரது விடாமுயற்சி மற்றும் பெண்களின் உரிமைகளுக்கான போராட்டத்தின் அங்கீகாரம்” என குறிப்பிட்டிருந்தார்.