சிவகங்கை குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த பணிகளுக்கான டெண்டர் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இதில் பங்கேற்க தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர்  சேங்கை மாறன் மற்றும் தி.மு.க ஒப்பந்ததாரர்களும்  பங்கேற்றனர். அப்போது திடிரென தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் அணியினருக்கும்  தி.மு.க நிர்வாகி கோவானூர் சோமன் என்பவரது அணிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
 




 




இந்நிலையில் இருதரப்புக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டு அருகில் இருந்த நாற்காலிகளை கொண்டு தாக்கி கொண்டதில் தி.மு.க நிர்வாகி சோமன் என்பவருக்கு தலையில்  பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சோமனின் ஆதரவாளர்கள் எதிர்தரப்புடைய காரை கல்லால் அடித்து தாக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தி.மு.கவினர் மோதல்  சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. தி.மு.கவினரிடம் அடிதடி சம்பவம் ஏற்பட்ட சில நாட்களில் அ.தி.மு.கவினர் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.



 

காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் ராஜேஸ்வரி தலைமையில் இன்று மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் 19 கவுன்சிலர்களும் கலந்துகொண்டனர்.  ஊராட்சி சேர்மன் ராஜேஸ்வரியின் செயல்பாடுகள் குறித்து வேளாங்குளத்தை சேர்ந்த மகேஸ்வரன் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சேர்மன் ராஜேஸ்வரிக்கு ஆதரவாக செயல்படும் முடிக்கரை கவுன்சிலர் மனோகரன் கேள்வி எழுப்பிய மகேஸ்வரனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட நிலையில் வாக்கு வாதம் முற்றி மோதல் ஏற்பட்டு இருவருக்கும் இடையே கைகலப்பானது.



மேலும் சிவகங்கை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - கீழடி: தரைவிட்டுக் கிளம்பும் தமிழன் நாகரீகம்... அமைச்சர் பெருமிதம் !

 

இருவரும் மாறிமாறி தாக்கி கொண்ட நிலையில் அங்கிருந்த சக கவுன்சிலர்கள் இருவரையும்  விலக்கிய நிலையில் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து மகேஸ்வரன் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் வந்து சமாதானம் செய்ததை தொடர்ந்து மீண்டும் கூட்டம் நடைபெற்றது.