திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி நாளிதழை அனைத்து நூலகங்களிலும் வாங்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மூலம் அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது. சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்கத்தின் காணொளி காட்சியில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் இயங்கி வரும் நூலகங்களுக்கு மூன்று நாளிதழ்கள் தவறாமல் வாங்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் அனுப்பப்பட்ட சுற்றறிகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி நூலகத்திற்கும் முரசொலி நாளிதழை வாங்க வேண்டும் என்றும் இதற்கான ஆண்டு சந்தா 1800 ரூபாயை முரசொலி சென்னை என்ற முகவரிக்கு வரைவோலை பெற்று வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மூலம் சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது.
சேலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள கிராம நூலகங்களுக்கு தினகரன், குங்குமம், தமிழ் முரசு போன்ற நாளிதழ்களை வாங்க வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்ளவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம்12, 524 ஊராட்சிகளில் நூலகங்கள் இயங்கி வரும் நிலையில் எந்த கட்சி ஆளும் கட்சியாக உள்ளதோ அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடுகளையும் ஆதரவு ஏடுகளையும் வாங்க சொல்லி அரசே உத்தரவு பிறப்பிப்பது தமிழகத்தில் வழக்கமாக உள்ளது. கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் எல்லா நூலகங்களிலும் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர் நாளேடு வாங்கப்பட்டது. இந்நிலையில் முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சி பிளவுகள் ஏற்பட்டு முடிந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்த நிலையில் தினகரன் வசம் சென்ற நமது எம்.ஜி.ஆர் நாளேடு நூலகங்களில் வாங்குவது நிறுத்தப்பட்டு நமது அம்மா நாளேடு அனைத்து நூலகங்களிலும் வாங்கப்பட்டது. அதுமட்டுமின்றி திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியை நூலகங்கள் வாங்குவதை 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது பத்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி நாளேட்டை நூலகங்கள் வாங்க வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் அரசு நூலகங்கள் இயங்கி வருகின்றன. இதில்12, 524 ஊராட்சிகளில் ஊர்புற நூலங்கங்கள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு நூலகமும் 1800 ஆண்டு சந்தா செலுத்தி முரசொலி வாங்கினால் ஆண்டுக்கு 2 கோடியே 25 லட்சத்து 43 ஆயிரத்து 200 ரூபாய் வரை செலவாகும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.