கடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சி போட்டியிட்டது. இந்த தேர்தலில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மக்கள் நீதிமய்யம் எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. ஆனால், மாநிலம் முழுவதும் சுமார் 9 லட்சம் வாக்குகளை பெற்றது. குறிப்பாக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்தத் தேர்தல் தோல்விக்கு பிறகு அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் மகேந்திரன், சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ். உள்பட பலரும் கட்சியில் இருந்து விலகினர். மேலும் மகேந்திரன் தலைவர் கமல்ஹாசன் மீது குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனால் கட்சியினருடைய இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தேர்தல் தோல்வி மற்றும் கட்சி பிரச்னைகளால் துவண்டு விடாமல் மக்கள் நீதி மய்யத்தின் கட்சியினர் சென்னையில் கொரோனா நிவாரண பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் நேற்று அக்கட்சியின் சென்னை மாநகர செயலாளர் அப்துல் முசாஃபர் சார்பில் சாலையோரம் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் உதவி அளித்த நிழற்படங்களையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த மாதம் ஏற்பட்ட கட்சி பிரச்னைக்கு பிறகு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், "“ஊர் அடங்கினாலும் வாய் அடங்காது என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்றாக நாம் ஆகிவிடக்கூடாது. தோல்வியை ஆராய்ந்து அதில் வெற்றிப்பாடம் கற்பது நாம் இதுவரை கண்ட சரித்திரம். மக்களிடம் முக அறிமகம் இல்லாதவர்களையும், சற்றே தெரிந்தவர்களையும் புது எழுச்சி அரசியலின் நட்சத்திரங்களாக மின்னவைக்க நாம் நினைத்ததுதான் சிலருக்கு சர்வாதிகரமாக தெரிகிறது.
கட்சியின் உட்கட்டமைப்பை தனி மனிதர்கள் தங்களது ஆதாயத்திற்கு ஏற்ப மாற்றி ஆடிய விளையாட்டுகள் இனி தொடராது. செயல்வீரரகள் மற்றும் செயலாற்றும் வீரர்களின் கரங்கள் இனி வலுப்படுத்தப்படும். உருமாறிய மககள் நீதிமய்யத்தை அனைவரும் இனி பார்ப்பார்கள். நம் கொள்கையில் என்றும் ஒரு தெளிவும், பாதையில் ஒரு நேர்மையும் இருப்பதால் நம் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது. என் உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன். அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யமும் இருக்கும்" எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க:பெண் எஸ்.ஐ.,யை வசைபாடிய ஆட்டோ டிரைவர் ‛அரெஸ்ட்’