பீகாரை சேர்ந்த அரசியல்வாதியான ராம்விலாஸ் பாஸ்வானின் கட்சி இரண்டாக உடைந்துள்ளது. இதனால் லோக் ஜன சக்தி கட்சியின் பெயரும் சின்னமும் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ளது. அதோடு இடைத் தேர்தலுக்காக கட்சி பெயரில் மாற்றம் செய்யப்பட்டு சிராக் பாஸ்வானுக்கு ஹெலிகாப்டர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.


முன்னதாக லோக் ஜன சக்தி தலைவராக இருந்த ராம்விலாஸ் பாஸ்வான் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அதனை அடுத்து சிராக்கின் சித்தப்பா பசுபதி குமார் அவருக்கு எதிராக மாறினார். குறிப்பாக சிராக் பாஸ்வானை கட்சியின் பொறுப்பில் இருந்தும் நீக்கினார்கள்.


இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்துக்கு வந்ததை அடுத்து, அதிமுகவின் இரட்டை இலை முடக்கப்பட்டதை போல், லோக் ஜன சக்தி கட்சியின் பெயரும் சின்னமும் முடக்கப்பட்டது. இந்நிலையில் பீகாரில் உள்ள சில தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருவதையொட்டி இரண்டு குழுக்களும் தங்களுக்கு கட்சியை தர வேண்டும் என போட்டி போட்டனர்.




இது தொடர்பாக தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில் சிராக் தலைமையிலான அணியினருக்கு லோக் ஜன சக்தி (ராம் விலாஸ் பஸ்வான்) என்றும் பசுபதி குமார் தலைமையிலான அணிக்கு ராஷ்ட்ரிய லோக் ஜன சக்தி என்றும் பெயர்களை கொடுத்து ஹெலிகாப்டர் சின்னமும் தையல் மெஷின் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளன.






 


பீகாரில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட லோக் ஜனசக்தி கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. தலித் மக்களின் வாக்குகளை பிரித்து தேஜஸ்வி தலைமையிலான அணிக்கு பின்னடவை ஏற்படுத்த இது போன்ற முயற்சியை பாஜக செய்வதாகவும் சிராக் அதற்கு பலியாக கூடாது என்றும் பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் தனியாகவே சிராக் களம் கண்டார்.




சிராக்கின் இந்த முடிவால் பலரும் கட்சியில் அதிருப்தி அடைந்தனர். ஆனாலும் தேர்தல் முடியும் வரை காத்திருந்து கட்சியில் பிரிவினையை ஏற்படுத்தினார்கள். பாஜகவின் அழுத்தம் காரணமாக செயல்பட்டு கடைசியில் பீகார் தேர்தலில் கடுமையான தோல்வியை சந்தித்ததாகவும் இது போன்ற பெரிய முடிவுக்கு கைமாறாக பாஜக செய்தது என்ன எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.


ஒருகட்டத்தில் மோதல் முற்ற, அணியாக பிரிந்து கட்சி தலைவர் பதவியில் இருந்து சிராக் நீக்கப்பட்டார். இந்த மொத்த பாதிப்புக்கும் பாஜகதான் முழுப் பொறுப்பு என்று கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் அதை எதையும் சிராக் கண்டு கொள்ளவில்லை.


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண