கடந்த ஞாயிற்றுக் கிழமை உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூருக்கு சென்ற மத்திய இணை அமைச்சராக புதிதாக பொறுப்பேற்ற அஜய் மிஸ்ரா காரில் சென்று உள்ளார். அவருடன் ஏராளமான பாஜகவினரின் கார்களும் அணிவகுத்து சென்று இருக்கின்றன. அப்போது மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் அவ்வழியே வந்த மத்திய இணை அமைச்சரின் காரை வழிமறித்து கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த நிலையில் அமைச்சருடன் வந்த பாஜகவினரின் கார் நிற்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விவசாயிகள் மீது வேகமாக மோதியது. இதில் நான்கு விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் பாஜக உறுப்பினர்களாக அறியப்படும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகின. மேலும் அங்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் ஒருவரும் கலவரத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனினின்றி உயிரிழந்தார்.



விவசாயிகள் மீது மோதிய காரை, மத்திய அமைச்சர் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா ஓட்டி வந்ததாக விவசாயிகள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஆஷிஷ் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.  வன்முறை நடந்த இடத்துக்கு உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் செல்ல முயல்வதாக தகவல் வெளியானதை தொடர்ந்து அவரை வீட்டுக் காவலில் அடைத்தது அம்மாநில காவல் துறை. அதே போல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் விவசாயிகள் உயிரிழந்த லக்கிம்பூருக்கு செல்ல முயன்றார். அவரையும் போலீசார் கைது செய்து தனிமையான இடத்தில் அடைத்தனர்.


இந்த நிலையில், அகிலேஷ் யாதவும், மாயாவதியும் இந்த விவாகரம் குறித்து பேச தவறிவிட்டதாக பிரயங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார். உத்தரப் பிரதேச மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் எழுப்ப மாநில கட்சிகளின் தலைவர்கள் இருவரும் தவறிவிட்டதாக அவர் தெரிவித்தார். "அகிலேஷ் யாதவும், மாயாவதியும் எங்கு சென்றார்கள்? ஹத்ராஸ் பாலியல் படுகொலை சம்பவமாகட்டும், லக்கிம்பூர் கேரி விவசாயிகள் தாக்குதல் சம்பவமாகட்டும் இரண்டையும் இருவரும் கண்டுகொள்ளவில்லை. காங்கிரஸ் மட்டுமே மக்களோடு மக்களாக துணை நிற்கிறது.” என பிரியங்கா காந்தி தெரிவித்து இருக்கிறார்.


லக்கிம்பூரில் நிகழ்ந்த இந்த வன்முறை தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்து உள்ளது. அந்த விசாரணையின் முடிவு வெளியான பிறகே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க முடியும் என  உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார். அதே போல், உயிரிழந்த 4 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.45 லட்சம் இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வாங்கித் தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டு உள்ளது. அதே போல், காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.