ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனி விமானம் மூலம் டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இன்று டெல்லி செல்கிறார். 


டெல்லி பறக்கும் முதலமைச்சர்:


ஜி-20 மாநாட்டை, இந்த ஆண்டு தலைமையேற்று நடத்துவதற்கான பொறுப்பை இந்தியா பெற்றுள்ளது. இந்நிலையில், இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள 40க்கும் மேற்பட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


 






பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல தலைவர்களும் பங்கேற்கின்றனர்.


தனி விமானம்:


ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (டிச.05) காலை 10 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். தொடர்ந்து இன்று இரவே அவர் மீண்டும் தனி விமானம் மூலம் சென்னை திரும்பவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலின் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தராதது குறித்து பேச வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் டெல்லி வரும் எதிர்க்கட்சித் தலைவர்கள், முக்கிய அரசியல் தலைவர்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.


ஜி- நாடுகள்:


ஜி 20 நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, கனடா, பிரேசில், பிரான்ஸ், சீனா, இந்தியா, ஜெர்மனி, இத்தாலி, இந்தோனேசியா, கொரியா குடியரசு, ஜப்பான், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, இங்கிலாந்து, துருக்கி, அமெரிக்கா ஆகிய 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.


இந்தாண்டில், இந்தோனேசியாவில் ஜி 20 மாநாடு நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்த ஜி-20 மாநாட்டை நடத்துவதற்கான தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில், ஜி-20 மாநாட்டை சிறப்பாக நடத்தும் பொருட்டும், மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்தியாவில் உள்ள பல்வேறு இடங்களில், விழிப்புணர்வு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாமல்லபுரம் வண்ண விளக்குகளால் ஒளிர விடப்பட்டுள்ளன.