டிசம்பர் 5- ஒட்டுமொத்த நாடே வியந்த இரும்புப் பெண்மணியான ஜெயலலிதா, இந்தியாவின் மகளாய் மறைந்த தினம் இன்று.


மனிதராய்ப் பிறக்கும் எல்லோருக்கும் ஒருசேர அறிவு, திறமை, அழகு, ஆளுமை அனைத்தும் அமைந்துவிடுவதில்லை. அவை அரிதாகச் சிலருக்கு மட்டுமே வாய்க்கின்றன. அத்தகையோரில் ஒருவர் ஜெயலலிதா. ஆனால் அவற்றால் மட்டுமே அவர் வரலாற்றில் நிலைத்து நிற்கவில்லை. வேறுசில தனித்துவப் பண்புகளால் காலத்தால் அழித்துவிட முடியாத கலங்கரை விளக்கமாய் நிற்கிறார் ஜெயலலிதா. 


பெண்களுக்கான முன்மாதிரியாகவும் அவர்களுக்கான அகத்தூண்டுதலாகவும் திகழும் ஜெயலலிதாவின் சில குணங்கள் இவை:


சகலகலாவல்லி


பிடித்தது கிடைக்காவிட்டால் கிடைப்பதைப் பிடித்ததாக மாற்றி, வெற்றிகரமாகப் பிடித்துக்கொள்ளும் பண்பு ஜெயலலிதாவுக்குப் பால்யத்திலேயே இருந்தது.  அரசியலுக்கு வர, தான் எப்போதுமே விரும்பியதில்லை என்று பல்வேறு பேட்டிகளில் கூறியிருக்கிறார். ஆனால் அவர் அரசியலில் இன்னும் பல நூற்றாண்டுகளுக்குத் தன் பெயர் நிலைக்கும்படி சாதித்தது வரலாறு.


சிறுவயதில் இருந்தே அவர் அப்படித்தான்… படிப்பில் முதல் ஆளாக இருந்தாலும் நடனத்திலோ வேறு கலைகளிலோ ஆர்வம் இல்லாத சிறுமியாக இருந்தவர் ஜெயலலிதா. ஆனால் பிற திறமைகளையும் ஜெயலலிதா கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் அவரின் அம்மா சந்தியா தீர்மானத்துடன் இருந்தார். அம்மாவின் வலியுறுத்தலை விருப்பமே இல்லாமல் ஏற்றுக்கொண்டார் ஜெ. அதற்காக ஏனாதானோவென்று அவர் நடனம் கற்றுக்கொள்ளவில்லை.  


சிறந்த மாணவி:


பரதம், குச்சிப்புடி, மோகினியாட்டம், மணிபுரி, கத்தக் உள்ளிட்ட பல்வேறு நடன வடிவங்களைக் கசடறக் கற்றுத் தேர்ந்தார். ஜெ.வின் நடனத் திறமையை நடிகர் திலகம் சிவாஜி கணேசனே பாராட்டியதே அதற்குச் சான்று. கர்நாடக சங்கீதம், பியானோ உள்ளிட்டவற்றையும் ஜெ. விட்டுவைக்கவில்லை. 


சூழல் காரணமாக ஜெ. படித்தது 10-ம் வகுப்பு வரைதான் என்றாலும், அந்தத் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக வந்து தங்க விருது பெற்றார். தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுடன் மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை நன்கு அறிந்திருந்தார். தமிழ், ஆங்கிலத்தில் நிபுணத்துவம் பெற்று, அவற்றில் சரளமாகப் பேசவும் எழுதவும் தெரிந்தவர். 



நிறைவேறாத வழக்கறிஞர் கனவு 


ஜெ.வின் அப்பா ஜெயராம் ஒரு வழக்கறிஞர். பேச்சில் சுட்டியாக இருந்த ஜெ.வுக்கு அப்பாவைப் போல வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பதே லட்சியமாக இருந்தது. ஆனால் குடும்ப சூழல் காரணமாக நடிக்க வந்தார் ஜெயலலிதா. விருப்பமில்லாமல் நடிப்புத் துறைக்கு வந்தாலும்,  திரையுலகில் தனக்கெனத் தனி இடம் பிடித்தார்.


கடின உழைப்பு


சில ஆண்டுகளிலேயே 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை படைத்தவர் ஜெயலலிதா. தமிழில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் தெலுங்கில் என்.டி.ராமராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ் ஆகியோருடனும் நடித்தார். இந்தி மொழியில் தர்மேந்திரா உடனும் நடித்தார். நடிப்பு, நடனம் மட்டுமின்றி, 11-க்கும் மேற்பட்ட திரைப் பாடல்களையும் ஜெயலலிதா பாடியுள்ளார்.


எம்ஜிஆரால் அரசியலுக்குள்.. அதிமுகவுக்குள் நுழைந்தாலும் கடின உழைப்பும் சாதுர்யமும்தான் அவரைக் காப்பாற்றியது. கட்சியின் நிரந்தரப் பொதுச் செயலாளர் ஆக்கியது. மாநிலங்களவை உறுப்பினராகவும் ஜெ.வின் குரல் டெல்லியில் ஒலித்துள்ளது. 



சிம்மக் குரல்


ஒவ்வொருவரின் அடையாளங்களில், அவர்களின் குரலுக்குத் தனி இடம் உண்டு. ஜெயலலிதாவுக்கும் அது இருந்தது. திரைப்படங்களில் இனிமையான குரலில் பாடத் தெரிந்தவருக்கு, கர்ஜிக்கும் கணீர்க் குரலும் வாய்த்திருந்தது. அவர் சொல்லும் 'ஜெ.ஜெயலலிதா எனும் நான்...', 'மக்களால் நான்.... மக்களுக்காக நான்', 'ரத்தத்தின் ரத்தங்களே' என்ற குரல் காலத்தால் மறையாது. 


அசாத்திய துணிச்சல்


1990களுக்குப் பிறகான தமிழ்நாட்டு அரசியலில், ’அரசியல் சாணக்கியர்’ என்று அழைக்கப்படும் முன்னாள் முதல்வர் கருணாநிதியே செய்யத் தயங்கிய ஒன்று, 'தேர்தலில் தனித்துப் போட்டி'. 2014 தேர்தலில் மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டார்.  பல்வேறு விதமான அரசியல் கணக்குகளுக்கு மத்தியில் தனித்துப் போட்டியிட்டதே சாதனைதான் என்றாலும், அவற்றில் வெற்றியும் பெற்று சரித்திர சாதனை படைத்தார் ஜெயலலிதா. 


 



முன்னாள் முதல்வர் ஜெயலலிதா


பெண்களுக்கான தலைவர்


ஆண்கள் மட்டுமே அதிக காலம் கோலோச்சும் அரசியல் துறையில், முத்தாய்ப் பிரகாசித்தவர் ஜெயலலிதா. பெண்ணாய்ப் பிறந்ததால் அவர்களின் தேவையைக் கூடுதலாய் உணர்ந்தவர், பெண்களுக்கான முன்னோடித் திட்டங்கள் பலவற்றைக் கொண்டு வந்தார்.


பெண் குழந்தைகளுக்கு அரசே வைப்பு நிதி அளிக்கும் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், சிசுக்கொலையைத் தடுக்க தொட்டில் குழந்தை திட்டம், பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின், குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மாவு, மகளிர் சுய உதவிக்குழுத் திட்டம், அம்மா குழந்தைகள் நலப் பரிசுப் பெட்டகம், பொது இடங்களில் பாலூட்டும் தாய்களுக்கான தனி அறைத் திட்டம் எனப் பல்வேறு மகளிர் முன்னேற்றத் திட்டங்களுக்கு முன்னோடி ஜெ.


உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்பதுதான் அரசியலில் கால்பதிக்க பெண்கள் வைக்கும் முதல் படி. அவரது ஆட்சிக் காலத்தில்தான் 50 சதவீத இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.


 





அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாத குணம்


தான் எடுக்கும் முடிவை சரியானதாக மாற்றுவதும், அதனால் வரும் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் எதிர்த்து நிற்பதும் ஜெயலலிதாவுடன் பிறந்த குணம். இதை அரசியலில் மட்டுமின்றி திரை உலகம், சொந்த வாழ்க்கையிலும் பின்பற்றினார் ஜெயலலிதா. 


அரசியல் உலகுக்குள் எந்தவிதப் பின்புலமும் இல்லாமலும் அரசியல் குடும்பத்தில் இருந்து வராமலும் சாதித்துக் காட்டிய தனியொருவர், நெருப்பாற்றில் நீந்தியே பழக்கப்பட்டு, தமிழ்நாட்டு அரியாசனத்தில் 4 முறை வீற்றிருந்தவர்.


பலவீனத்தை வெளியில் காட்டாதவர் 


உடல் உபாதைகளால் அவதிப்பட்ட ஜெயலலிதாவுக்கு நெடு நேரம் நிற்க முடியாத பிரச்சினை இருந்தது. ஆனால் அதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள அவர் விரும்பவில்லை. அதை காட்டிக்கொண்டால் பலவீனமாகத் தெரியுமோ என்று அவர் யோசித்ததாகவும் கூறப்பட்டது. 2016-ம் ஆண்டு அவர் முதல்வராகப் பதவியேற்றபோது ஒட்டுமொத்த அமைச்சரவையையும் ஒரே நேரத்தில், சில நிமிடங்களுக்குள் பதவி ஏற்க வைத்தார். காலில் சிறிய அறுவைசிகிச்சை செய்திருந்ததால், அதைக் காட்ட விரும்பாமலேயே அவர் காலுறையைப் பயன்படுத்த ஆரம்பித்ததாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் நிலவியது. 




இறக்கும் வரை அரியாசனம்


வளர்ப்பு மகன் திருமணம், டான்சி வழக்கு, குடும்ப ஆதிக்கம், சொத்துக்குவிப்பு வழக்கு எனப் பல்வேறு சர்ச்சைகள் அவரைச் சுற்றி சுழற்றியடித்தாலும், ஜெயலலிதாவின் தளராத தன்னம்பிக்கையும் மன திடமும் போராட்ட குணமும் கடின உழைப்புமே அவரை இறக்கும் வரையில் அரியாசனத்தில் அமர்த்தி இருந்தது.


தோல்வி வந்தால் ஓடிப்போக மாட்டேன்


ஒருமுறை வார இதழுக்கு அளித்திருந்த பேட்டியில் ஜெ. பின்வருமாறு கூறியிருந்தார்.


''நான் எம்ஜிஆரின் நிழலில் குளிர் காய வந்தவள் அல்ல. எந்த லாபத்திற்காகவும் இங்கே (அரசியலுக்கு) வரவில்லை. பெயரும் புகழும் எனக்கு ஏற்கெனவே நிறைய இருக்கிறது... கட்சிக்கு நம்பிக்கை மிகுந்த தொண்டராகவே எப்போதும் இருப்பேன். தோல்வி வந்தால், ஓடிப்போக மாட்டேன்.''


மேற்குறிப்பிட்ட பல பண்புகள் இன்றைய பெண்களுக்கான முன்னுதாரண குணங்களாக இருக்கின்றன.