சேலம் மாவட்டம் எடப்பாடியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியது, "தமிழக முதல்வர் ஸ்டாலின் காவல்துறை மானிய கோரிக்கையின்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். அவரது பதில் உரையில் கள்ளசாராயம் மரணம் குறித்து பேசியுள்ளார். அதிமுக மற்றும் பல்வேறு எதிர்க்கட்சிகள் கள்ளக்குறிச்சி மரணத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. ஆனால் திமுக அரசு கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம்.


திமுக அரசு கள்ளக்குறிச்சி கள்ளசாராய மரணம் உரிய நடவடிக்கை எடுக்க தவறிய காரணத்தால் போராட்டங்கள் நடத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி மரணம் குறித்து தமிழக முதல்வர் இறந்தவர்களின் பாதிப்பு பற்றி உணராமல், இந்த விசாரணையை சிபிசிஐடி தான் விசாரிக்கும், சிபிஐ விசாரிக்க தேவையில்லை என்ற கருத்தை தெரிவித்துள்ளார்.


சாத்தான்குளம் விவகாரத்தில் சிபிஐ விசாரிக்க அதிமுக முன்வரவில்லை என்று தவறான கருத்தை முதல்வர் தெரிவித்துள்ளார். இறப்பு காரணம் குறித்து உரிய நடவடிக்கையை அதிமுக எடுத்தது. அப்போது உடனடியாக யார் யார் சம்பந்தப்பட்டவர்கள் என்று விசாரணை நடத்தி அதிமுக நடவடிக்கை எடுத்தது. அதிமுக அரசு இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று அறிவிப்பை வெளியிட்டேன் அதன் பிறகு அரசாணை வெளியிடப்பட்டது. இந்த வழக்கு வந்தபோது மதுரை உயர்நீதிமன்ற கிளை,நீதியரசர்கள் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு வழங்கியது. அதன் பின்னர் அதிமுக அரசு சிபிசிஐடி மூலமாக வழக்கை விரைந்து உயர்நீதிமன்ற உத்தரவின்படி விசாரணை நடத்தப்பட்டு குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது விசாரணை அடிப்படையில் கொலை வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடி இடமிருந்து வழக்கு சிபிஐ இடம் ஒப்படைக்கப்பட்டது. அதிமுக நியாயமாக உண்மையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் உத்தரவு இருந்தாலும் அதிமுக அரசு தாங்கள் அறிவித்த அறிவிப்பின்படி சிபிஐயிடம் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்பொழுது சாத்தான்குளம் வழக்கில் உண்மையாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.



ஆனால் கள்ளக்குறிச்சியில் கள்ளசாராய விவகாரத்தில் அப்போது மாவட்ட ஆட்சியர் அரசின் அழுத்தத்தின் காரணமாக தவறான தகவலை வெளியிட்டார்கள். இதனால்தான் இவ்வளவு உயிர் சேதம் ஏற்பட்டது. கள்ளசாராயத்தால் முதலில் இறந்தவர்கள் குறித்தும், யாரும் கள்ளசாராயம் அருந்திவிட வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் உண்மையான செய்தியை வெளியிட்டு இருந்தால் விலை மதிக்க முடியாத 65 உயிர்களை காப்பாற்றி இருக்க முடியும். இதெல்லாம் அரசாங்கத்தின் அழுத்ததின் காரணமாகவே மாவட்ட ஆட்சியர் அப்பொழுது இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த வழக்கை மாநில அரசு விசாரித்தால், சிபிசிஐடி விசாரித்தால் உண்மை குற்றவாளிகள் தப்பித்து விடுவார்கள்.


இதில் ஆளும்கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் ஈடுபட்டிருப்பதாக பல்வேறு தரப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காணவேண்டும் என்றால் சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை நிலவரம் நாட்டு மக்களுக்கு தெரியவரும். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சாத்தான்குளம் பற்றி பேசினார். உண்மை குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்று சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது அதிமுக அரசு தான். ஆனால் தற்போது தமிழக முதல்வர் அடம்பிடித்துக் கொண்டு சிபிசிஐடி தான் விசாரிக்கும் என்று கூறி வருகிறார். மடியில் கனமில்லை என்றால் வழியில் ஏன் பயம் என்று கேள்வி எழுப்பினார்.


இதைதொடர்ந்து பேசிய அவர், டெல்லி பயணம் செல்லவில்லை அவ்வாறு சென்றால் அறிவிக்கிறேன். மேலும் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் உட்பட்ட உடுமலை வனசரகத்தில் கள்ளசாராயம் அருந்தி ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு பிறகும் கள்ளசாராயத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது. தற்போது மதுபானம் 90 எம்.எல் பாக்கெட்டுகளில் விற்பது குறித்து அரசு ஆலோசனை செய்து வருகிறது. இவ்வாறு விற்பனை செய்தால் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகும் என்று கூறுவது சரியானதுதான். குறைத்துக்கொடுத்தால் அதிகம் தான் குடிப்பார்கள். இதன்மூலம் எவ்வாறு கள்ளசாராயத்தை தடுக்க முடியும். கள்ளசாராயத்தை காட்சி விற்பது ஆளும்கட்சி பிரமுகர்கள் தான் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தான் காவல்துறையினர் அடக்க முடியவில்லை. கொரோனா களத்தில் பத்து மாதங்கள் மதுபான கடைகளை மூடினோம். அப்பொழுது கூட கள்ளசாராயம் மரணங்கள் இல்லை. தமிழகத்தில் இன்றைக்கு பல்வேறு இடங்களில் கள்ளசாராய சாவுகள் அதிகம் நடைபெற்று வருகிறது. இதைத்தான் வலியுறுத்துகிறோம் இதை இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும் என்றார்.


அதிமுக கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கவனம் ஈர்ப்பு தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். அதை இந்த திமுக அரசு எடுத்துக் கொள்ளவில்லை. இதை எடுத்துக்கொண்டு தமிழக அரசு விசாரித்து இருந்தால் இவ்வளவு கள்ளசாராய மரணங்கள் நிகழ்ந்து இருக்காது. கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தொலைபேசியின் வாயிலாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் கள்ளசாராயம் குறித்து பேசி உள்ளார்.


அவரது கவனத்திற்கு கள்ளக்குறிச்சி ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கொண்டு சென்றுள்ளார். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழகத்தின் போதை பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் போதை பொருட்கள் நிறைந்த மாநிலமாக காட்சியளிக்கிறது தடுத்து நிறுத்துங்கள். இதனால் மாணவர்கள் இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகள் அருகே அதிக விற்பனை செய்து வருகிறார்கள்.


இதை கண்டுபிடித்து தடுத்து நிறுத்தவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறினார். மேலும் கள்ளசாராயம் குறைந்த விலையில் கிடைப்பது என்று நினைத்துதான் கள்ளசாராயத்தை நாடுகிறார்கள்; கள்ளசாராயத்தை அழித்துவிட்டால் இந்த மரணங்கள் நிகழாது. கள்ளக்குறிச்சி கள்ளசாராய வியாபாரத்தில் இறந்தவர்கள் ஏழ்மை குடும்பத்தில் இருப்பவர்களை மட்டும் காப்பாற்றுவதற்கு தான் இந்த நிதி இல்லையென்றால் எவ்வாறு அவர்களை காப்பாற்ற முடியும். வயதானவர்கள் நிறைய உள்ளார்கள் அவர்களால் உழைத்து வாழ முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு இந்த நிதி பயன்படும் என்றார். எங்களைப் போன்று நல்லகாரியங்களுக்கு உண்ணாவிரதத்தில் நாம் தமிழர் ஈடுபட்டால் அதற்கு அதிமுக கண்டிப்பாக ஆதரவு தெரிவிக்கும் எனவும் தெரிவித்தார்.



விக்கிரவாண்டி தொகுதியில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை பயன்படுத்தி வாக்கு சேகரித்தார். அதிமுக தலைவர்கள் தான் நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்டது. அதிமுக நாட்டு மக்களுக்கு நன்மை செய்கிறது. அப்படிப்பட்ட கட்சித் தலைவர் படம் இருந்தால் தான் வாக்கு விழும் என்று எதிரணியே நினைக்கிறார்கள் எங்களுக்கு பெருமையாக இருக்கிறது.


எங்கள் தலைவர்கள் படத்தை வைத்துதான் வாக்கு சேகரிக்கும் சூழல் உள்ளது. எங்கள் தலைவருக்கு எப்படிப்பட்ட மரியாதை உள்ளது என்பதை உணரவேண்டும் என்றார்.


மத்திய அரசு எல்லாம் மாநிலங்களின் கருத்துக்களை கேட்டும், மக்களின் கருத்துக்களை கேட்டும் புதிய கல்விக் கொள்கை உருவாக்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதிமுகவை பொறுத்தவரை மக்களுடைய பிரச்சினைகளை பேசுவதற்கு தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். இதன் மூலம் மக்களிடையே அனுபவத்தை தேடுவதற்கு அல்ல. உண்மை நிலையை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவோம். நீட் தேர்வு விவகாரத்தில் மக்களவையில் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு நீட்தேர்வு குறித்து பேச வேண்டும் என்று கூறுவது. திமுகவின் நிலைப்பாடு இரட்டை வேடம் தான். ஆனாலும் அழுத்தம் கொடுக்கமாட்டார்கள்.


இந்திய கூட்டணி தலைவர்கள் நீட் தேர்வில் உள்ள முறைகேடு குறித்து தான் விசாரிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் நீட்டை ரத்து செய்யவேண்டும் என்று யாரும் குரல் கொடுக்கவில்லை. நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறும் நிலையில் அவரது இந்தியா கூட்டணியை அவருக்கு ஆதரவு இல்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றவர்கள் நீட் தேர்வு குறித்து தமிழகத்தில் பேசுகிறார்கள். ஆனால் நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும் அவ்வாறு கொடுத்தால் மட்டும்தான் நீட் தேர்வுக்கு அதிகாரம் கிடைக்கும். தமிழகம் புதுவையில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும், நீட் தேர்வை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என்று இந்திய கூட்டணியில் 234 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு என்ன முயற்சி எடுப்பார்கள் என்று பார்ப்போம்.


நாடாளுமன்றத்தில் செங்கோலை வைக்க வேண்டும், வைக்க வேண்டாம் என்றும் பலர் கூறுகிறார்கள். இது மத்திய அரசு சம்பந்தப்பட்டது. இது எல்லாம் மத்தியில் இருக்கின்ற ஆட்சியாளர்கள் நடத்துகின்ற நாடகம். மத்தியில் தேசிய கட்சிகள் நாடகத்தை அரங்கேற்று இருக்கிறார்கள்.


அதிமுகவை பொருத்தவரை நாட்டு மக்களின் பிரச்சினை தான் முக்கியம். அதுவே இது தான் சட்டமன்றம் நாடாளுமன்றத்தில் அதிமுக செயல்பட்டு வருகிறது. தேர்ந்தெடுத்த மக்களுக்கு விசுவாசமாக, பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதே எங்களது லட்சியம்" என்றும் தெரிவித்தார்.