ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இன்று தேர்தல் பரப்புரைக்கு கடைசி நாள் என்பதால் அனைத்து கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று ஈரோடு சம்பத் நகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசியதாவது,
மகளிர் உரிமைத் தொகை:
“எதிர்க்கட்சித் தலைவர் தி.மு.க. ஆட்சிக்கு வந்து எதையும் செய்யவில்லை என்றார். 5 ஆண்டு காலத்தில் செய்ய வேண்டிய பணிகளைத்தான் தேர்தல் வாக்குறுதிகளாக அளித்துள்ளோம். எங்களுக்கு 5 ஆண்டுகள் தேவையில்லை. விரைவிலே இந்தாண்டுக்குள் அனைத்து பணிகளையும் நிறைவேற்றிக் காட்டுவோம். நான் சாதா ஸ்டாலின் அல்ல. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை மறந்துவிடக்கூடாது.
முக்கியமான ஒன்று உள்ளது. அதை நான் மறக்கவில்லை. நீங்கள் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். எதிர்க்கட்சித் தலைவர் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். ஏன்? மக்களே மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். அதுதான் உரிமைத் தொகை. பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைத் தொகை.
பட்ஜெட்டில் அறிவிப்பு:
மாதம் 1000 ரூபாய் வழங்குவோம் என்று சொன்னோம். நிதிநிலைமை மட்டும் ஒழுங்காக வைத்துவிட்டு போயிருந்தால் நாங்கள் வந்தவுடன் அதையும் நிறைவேற்றியிருப்போம். கொள்ளையடித்துவிட்டு போனீர்களே..? கஜானாவை காலியாக மட்டுமின்றி கடனும் வைத்துவிட்டு போனீர்களே..? அதனால் அதையெல்லாம் நாங்கள் சரி செய்து கொண்டிருக்கிறோம்.
உறுதியாக சொல்கிறேன். வரும் மார்ச் மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கான உரிமைத் தொகை ரூபாய் 1000 எப்போது வழங்கப்படும்? என்பதை அறிவிக்கப் போகிறோம். இது ஸ்டாலின் சொல்லும் வார்த்தை. எடப்பாடி பழனிசாமியின் வார்த்தை அல்ல.
கவலை வேண்டாம்:
நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். சொன்னதைத்தான் செய்வோம். செய்வதைத்தான் சொல்வோம். சொல்லாததையும் செய்வோம். இது மக்களுக்காக பாடுபடும் ஆட்சி. அப்படிப்பட்ட ஆட்சிக்கு நீங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும். இடைத்தேர்தல் என்பது எடைத்தேர்தல். இந்த ஆட்சி என்ன செய்து கொண்டிருக்கிறது? தேர்தல் நேரத்தில் சொன்னதை எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்களா? முறையாக இந்த ஆட்சி நடக்கிறதா? என்பதை எடை போட்டு வழங்க வேண்டியது தீர்ப்பு.
விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் கலைஞரால் 1989ம் ஆண்டு கொண்டு வந்தார். எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்தபோது விவசாயிகள் மின்சார கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி 1 பைசா குறைக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். 89ல் நாம் ஆட்சிக்கு வந்தவுடன் எந்த கோரிக்கையும் வரவில்லை. சட்டமன்றத்தில் யாரும் பேசவில்லை. விவசாயிகள் ஊர்வலமாக கோட்டைக்கு வரவில்லை. உண்ணாவிரதப் போராட்டம் இல்லை. கோரிக்கை இல்லாமலே கலைஞர் நீங்கள் எந்த கோரிக்கையும் வைக்காமலே, இனிமேல் மின்சாரக் கட்டணமாக விவசாயிகள் ஒரு பைசா கூட செலுத்த வேண்டாம். அதை இடையில் வந்த அ.தி.மு.க. அரசு எப்படியெல்லாம் கெடுக்க முயற்சித்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.
நாம் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு ஒன்றரை லட்ச விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் வகையில் வெற்றிகரமாக நாம் நடத்தி வெற்றி பெற்றுள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.