தமிழ்நாடு ஆளுநர் ரவி ஆளுநராக பதிவி வகிக்கவே தகுதியற்றவர் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கூட்டியுள்ளது.
அந்த கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
சட்டமுன்முடிவுக்கு ஒப்புதல் அளிப்பதில் தேவையற்ற காலதாமதம்
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் முக்கியமான சட்டமுன் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் தேவையில்லாமல் காலதாமதம் செய்கிறார். ஆளுநர் தரப்பில் கேட்கப்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தும் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்கிறார். தேவைற்ற காலதாமதம் வேதனையை ஏற்படுத்துகிறது. மேலும், ஆளுநரின் இந்த செயல் மாநில நிர்வாகத்தில் தலையிடுவதற்குச் சமம். ஆளுநரின் இந்த செயல் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்கு சேவை செய்வதைத் தடுக்கிறது.
குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க ஒப்புதல் அளிக்க தேவையற்ற தாமதம்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குற்றங்களை விசாரிக்க ஒப்புதல் கோரி அனுப்பப்பட்ட கோப்புகளை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். மேலும், உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட குட்கா வழக்கை விசாரிக்க சிபிஐ கோரிக்கை வைத்த கோப்புகளையும் கிடப்பில் போட்டுள்ளார். முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் பி. வெங்கட்ரமணா, முன்னாள் மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி, முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது விசாரணை நடத்த ஒப்புதல் வழங்காமல் உள்ளார்.
மாநில அரசின் அரசியல் மற்றும் கருத்தியல் எதிராளி ஆளுநர்
ஆளுநர் ரவி தனது தனிப்பட்ட அரசியல் மற்றும் மதம் சார்ந்த கருத்துகளை பொதுவெளியில் பேசிவருவது அவரது பதவிக்கு அழகல்ல. இது சங்கடத்தை ஏற்படுத்துவதுடன் சட்டப்படி நிறுவப்பட்ட அரசாங்கத்தின் மீது அவமதிப்பு, வெறுப்பு, அதிருப்தி மற்றும் தவறான எண்ணத்தைத் தூண்ட முயற்சிக்கிறார். பல்வேறு மொழி, மதம், இனம் சார்ந்த மக்கள் அமைதியாகவும் நல்லிணக்கத்துடன் வாழும் மக்களைக் கொண்ட தமிழ்நாடு, மதச்சார்பற்ற கொள்கைகள் மற்றும் பாலின சமத்துவத்துவம் ஆகிய கருத்துகளில் முழு நம்பிக்கை கொண்டுள்ள மாநிலம் தமிழ்நாடு. ஆனால் ஆளுநர் ரவி விரும்பத்தகாத மற்றும் பிளவு படுத்தக்கூடிய மதரீதியான கருத்துகளை பொதுவெளியில் பேசிவருகிறார். மேலும், சனாதன தர்மத்தை புகழ்வது தமிழ் இலக்கியத்தின் ரத்தினமான திருக்குறளை வகுப்புவாதப்படுத்துவது, திராவிட பாரம்பரியத்தையும் தமிழ் பெருமையையும் கண்டிப்பது போன்ற கருத்துகள், அறிக்கைகள், பேச்சுகள் தமிழ் மக்களின் உணர்வுகளை புண்டுத்தியுள்ளது.
குற்றவாளிகளை ஆதரித்தல் மற்றும் காவல்துறை விசாரணையில் தலையிடுதல்
கிரிமினல் குற்றங்கள் குறித்து ஆளுநர் ரவி தேவையில்லாமல் அறிக்கைகள் கொடுத்து வருகிறார். சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் குழ்ந்தைத் திருமணம் செய்து வைத்தற்கு காவல்துறையால் கைது செய்யப்பட்டார். ஆனால், இது குறித்து நாளிதழுக்கு, சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்துவைக்கவில்லை என பேட்டி அளித்துள்ளார். முக்கியப்பொறுப்பில் உள்ள ஆளுநர் இவ்வாறு கூறியது, காவல் துறையின் விசாரணையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு நடந்துகொள்ளும் ஆளுநர் இந்த பொறுப்பில் நீடிக்கலாமா அல்லது வேண்டாமா என்பதை குடியரசுத் தலைவரான உங்களது முடிவிற்கே விட்டுவிடுகிறேன் என கூறியுள்ளார்.