கல்லூரி மாணவர்களுக்குக் கல்வியும் கேளிக்கையும் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு வாசிப்பும் அவசியம். அந்த வகையில், மாணவர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்துக் காணலாம்.


திராவிட இயக்க வரலாறு பாகம் ஒன்று


தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை பொறுத்தவரை இந்தியா ஜனநாயக நாடாக மாறியதற்கு முன்பிலிருந்து இன்றுவரை மாநிலம் மற்றும் மொழி சார்ந்த அரசியலில் வலுவான கரம் கொண்டுள்ளதாகவே இருந்து வருகிறது. 1967-ல் முதல் மாநிலக் கட்சியின் ஆட்சி என்ற நிலையை கொண்டுவந்த தருணம், அது இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு நீங்கா இடமும் பிடித்துள்ளது. எனினும், டெல்லி மையமாக (Delhi-centric) எழுதப்படும் வரலாற்றில், திராவிட இயக்க வரலாறு என்பது பிராமண எதிர்ப்பு, இந்து மத வெறுப்பு, பிரிவினைவாத போக்கு மற்றும் மொழி பேரினவாதம் என்று குறுகிய மனப்பான்மை பொருந்திய ஒரு ஆதிக்க வாதமாகவே உள்ளது.


ஆனால், உண்மையில் திராவிட இயக்க வரலாறு என்பது அத்தகைய ஆதிக்க வர்க்கத்தினரிடம் உரிமைக்காக தொடுத்த சுயமரியாதை போராட்டத்தின் கதை. அதை மிக எளிய முறையில், விறுவிறுப்பான நடையில், சற்றும் சலிப்பூட்டாத  வகையில் எழுதி உள்ளார் ஆர். முத்துக்குமார். 


நீதிக் கட்சி முதல் அண்ணா ஆட்சி வரை இப்பாகத்தில் மிக சுருக்கமாகவும் ஒரு அத்தியாயத்திற்கு வெறும் நான்கு அல்லது ஐந்து பக்கங்களில் படிப்பவர்களுக்கு எளிதான வகையில் ஆசிரியர் எழுதியுள்ளார். தென்னிந்திய நல உரிமை சங்கம் என்று தொடங்கி திராவிட முன்னேற்ற கழகம் என்று பரிமாறிய வரலாற்றை இப்புத்தகம் விவரிக்கிறது.


முக்கியமாக, மாதவன் நாயர் பிரெஞ்ச் புரட்சியின் மீது கொண்ட ஈர்ப்பால் Justice Party என்று தனது கட்சிக்கு பெயர்சூட்டிய வரலாறு சுவாரஸ்யமான தகவலாக இருந்தது. மேலும், அம்பேத்கர் சௌத்பாரோ கமிட்டிக்கு தனது கருத்தை பரிசீலனை செய்யக்கோரிய அதே வேளையில், ஜஸ்டிஸ் கட்சியும் பிராமணர் அல்லாத மக்களுக்குகாக சமர்ப்பித்த திட்ட வரையறை மற்றும் அரசியல் நிர்ணய பேச்சுவார்த்தைள் தென்னிந்திய வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள் ஆகும். 


பெரியார் காங்கிரசில் இருந்து விலகி அதை தொடர்ந்து திராவிடர் கழகம் கடந்து வந்த பாதையை சீரிய நடையில் 300 பக்கங்களில் எழுதியுள்ள ஆசிரியர் பாராட்டுக்குரியவர். தேசியவாத பார்வையில் இருந்து எழுதும் வரலாற்றில் பெரியார் நடத்திய மொழி உரிமை மற்றும் சமூக நீதி போராட்டங்கள் அடிப்படைவாதமாகவும் பிரிவினைவாதமாகவும் கட்டமைக்கப்பட்டாலும், அன்றைய சூழலில் யானை பலம் கொண்ட காங்கிரஸுக்கு நேர் எதிர்த்துருவ அரசியல் செய்த இயக்கத்தின் வரலாற்றை படிக்கும்போது மிகுந்த வியப்பும் ஆச்சர்யமும் தருகிறது இப்புத்தகம். 


தேர்தல் அரசியலில் இறங்கும் முன் ஒரு இயக்கம் செய்த மக்கள் பணி, போராட்டங்கள் மற்றும் கொள்கை பிரச்சாரங்களின் முக்க்கியத்துவத்தை இந்த புத்தகம் படிப்பதின் மூலம் அரசியலில் வரவிருக்கும் தற்கால நேரடி முதலமைச்சர் கனவுகள் கொண்ட பலர் அறிந்துகொள்ளலாம். திராவிடர் கழகத்திலிருந்து திமுக என பிரிந்து, மிகுந்த பொறுமையுணர்ச்சியுடனும், சாமர்த்திய அரசியல் நுணுக்கத்துடனும் ஒவ்வொரு தேர்தலாக வளர்ச்சி பெற்று பிறகு மக்களின் பேராதரவுடன் ஆட்சி அமைத்த வரலாற்றை இந்த புத்தகம் மிக சிறப்பாக விளக்கியுள்ளது. அண்ணாவின் மரணம் வரை இடம்பெற்றுள்ள இந்த பாகத்தில் நிறைய அறியப்படாத தகவல்கள் கிடைக்கின்றன.


மாபெரும் தமிழ் கனவு:


தலைப்பை போன்று புத்தக்கத்தில் பக்கங்களின் எண்ணிக்கையும் அதிகம். இருந்த போதிலும், ஒவ்வொரு பக்கத்திலும் மாபெரும் கனவை கொண்ட அண்ணாவை பற்றி பல்வேறு வரலாற்று ஆய்வறிஞர்களின் பார்வை அடங்கியுள்ளது. 800 பக்கங்களா என்று சிறிது வியப்பு ஆரம்ப நாட்களில் இருந்தாலும், படிக்கப் படிக்க நாட்கள் சென்றதே தெரியவில்லை.


என்னை இப்படி நீண்ட நாட்கள் கட்டிப்போட்டப் புத்தகம் ஒன்று என்றால் சிறிதும் யோசிக்காமல் ராமசந்திர குகா எழுதிய India After Gandhi புத்தகம் என்றே கூறுவேன். பெயரில் காந்தி இருந்தாலும் புத்தகம் முழுவதும் இந்தியாவை நேரு எப்படி கட்டமைத்தார் என்பதை மையமாக வைத்து எழுதப்பட்ட புத்தகம். நேரு உலக சரித்திரம் படித்தவர், வெளிநாட்டில் கல்வி கற்று அறிவியலில் ஆழ்ந்த பற்று கொண்டவர், உலக தலைவர்கள் அனைவரையும் கவர்ந்த ஒரு Statesman. 


ஆனால், அண்ணாவோ  உலக சரித்திரம், அரசியல், சோசியலிசம் , பொருளாதாரம், நாடகம், சிறுகதை, மேடை பேச்சு என எல்லாவற்றிலும் தனக்கு என்று ஒரு இடத்தை அன்றே உருவாக்கி வைத்திருந்தார்  என்பது இந்த புத்தகத்தை படித்த பின்புதான் தெரியவந்தது. Shashi Tharoor எழுதிய India Shashtra என்ற புத்தகத்தில் The Life & Times Of C.N. Annadurai என்ற ஒரு கட்டுரை இருந்தது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருக்கு அண்ணா மீது என்ன பற்று, அதுவும் தமிழர் அல்லாத காங்கிரஸ் காரருக்கு அண்ணாவை எப்படி தெரியும் என்று யோசித்தேன்.


அண்ணாவின் நாடாளுமன்ற உரைகளை படிக்கையில் இன்று தென்னிந்திய அரசியல் தலைவர்கள் மெதுவாக பேச ஆரம்பிக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் (Proportional Representation), மாநில சுயாட்சி (State  Autonomy), Democratic Socialism போன்ற பல விடயங்களை அன்றே ஒரு கை பார்த்து இருக்கிறார் அண்ணா. இந்த புத்தகத்தை படிக்கையில், எனக்கு அண்ணாவின் அரசியல் ஆளுமை , பொருளாதார அறிவு, தமிழ்ப்பற்று, எழுத்தாற்றல் அனைத்தையும் விட அவரது வாழ்வியல் தத்துவம் பிடித்தது. அதில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற கோட்பாடு என்னை மிகவும் ஈர்த்தது. 


அண்ணா தன்னுடைய தம்பியர்க்கு எழுதிய கடிதங்களில் 'ஆரியம் இருக்கும் இடம்' மற்றும் 'கொட்டடி எண்: 9' ஆகிய இரண்டு கடிதங்களை கட்டாயம் இன்றைய தலைமுறை மாணவர்கள் அனைவரும் படிக்கவேண்டும். 


இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு:


இந்திய வரலாற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். நவீன இந்தியாவின் வரலாற்றை காந்திக்கு முன்பு, காந்திக்குப் பிறகு என்றுதான் பிரிக்கவேண்டியிருக்கும். இந்தியா சுதந்திரம் பெற்ற கதை பலராலும் பல முறை சொல்லப்பட்டுவிட்டது. ஆனால் சுதந்தரம் பெற்ற பிறகு இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் என்ன ஆனது, இன்றுள்ள நிலைக்கு நாம் எப்படி வந்து சேர்ந்தோம் என்னும் கதையைக் கோர்வையாகவும் எளிமையாகவும் ஆழமாகவும் விவரிக்கும் நூல் நீண்ட காலம் எழுதப்படாமலேயே இருந்தது.  அந்தக் குறையைப் போக்கிய முக்கியமான படைப்பு ராமச்சந்திர குஹாவின் India After Gandhi (2007).


ஜாதியை அழித்தொழிக்கும் வழி:


கடந்த 1936ஆம் ஆண்டு, ஆரிய சமாஜத்தின் இணை அமைப்பான ‘ஜாட் பட் தோடக் மண்டல்’ ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் உரையாற்ற அம்பேத்கர் அழைக்கப்பட்டபோது, அவர் தயாரித்த உரைதான் ‘ஜாதியை அழித்தொழிக்கும் வழி’. ஆனால், அந்த உரையில் இந்து மதத்தையும் அதன் புனித நூல்களையும் பற்றி கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.


உரையின் எழுத்துப் பிரதியைப் பார்த்து தாங்கள் விடுத்த அழைப்பை ‘ஜாட் பட் தோடக் மண்டல்’ அமைப்பு வாபஸ் பெற்றது. ஆனால், பின்னாட்களில் இது புத்தகமாக வெளியானது. சாதி எப்படி உருவானது, தலித்கள் என்றால் யார், சமூகத்தில் அது ஏற்படுத்திய தாக்கம் என்ன என ஆழமான ஆய்வுகளை கொண்டு எழுதப்பட்ட புத்தகம். 


இத்தகைய புத்தகங்களை மாணவர்கள் நிச்சயம் வாசித்துப் பார்க்கலாம்.