பாமக துவங்கி 35 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கடலூரில் பொதுக்கூட்டம் நடத்த பாமக சார்பில் அனுமதி கோரப்பட்டது. கடலூரில் அண்மை பாமக என்.எல்.சிக்கு எதிராக போராட்டம் நடத்திய இடத்திலேயே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டதால், அங்கு சட்டம் - ஒழுங்கு பிரசனை ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே விழுப்புரம் அல்லது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்திக்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதுவும் மாலை 6 மணிக்கு துவங்கும் பொதுக்கூட்டம் இரவு 8 மணி வரை நடத்திக்கொள்ளவும் உயர் நீதிமன்றம் அறிவுருத்தியுள்ளது. 


கடந்த மாதத்தில் தமிழ்நாடு அரசியல் களத்தில் மிகவும் பேசுபொருளாக இருந்தது கடலூர் மாவட்டத்தில்  அமைந்துள்ள என்.எல்.சி நிர்வாகம், நன்கு விளைந்து அறுவடைக்கு தயாரக இருந்த நெற்பயிர்களை புல்டோசர்கள் கொண்டு அழித்து, இரண்டாவது சுரங்க விரிவாக்கத்துக்காக மேல் வளையமாதேவி, கரிவெட்டி, கத்தாழைப் பகுதிகளில் 2006 – 2013 இடைப்பட்ட காலகட்டங்களில் கையகப்படுத்திய நிலங்களில் சுரங்க நீரை வெளியேற்ற புதிய பரவனாறு அமைக்கும் அந்தப் பணியைச் செய்தது. 


இதனை விவசாயிகள் உட்பட யாருமே எதிர்பார்க்காததால் விவசாயிகள் அனைவரும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி பலரது மனதையும் காயப்படுத்தியது. அரசியல் கட்சியினர் முதல் நீதிபதிகள் வரை பலரும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். 


பாமக இந்த செயலைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தது. இந்த ஆர்ப்பாட்டம் துவங்கியபோது அனைத்தும் காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் அதன் பின்னர் போராட்டம் காவல்துறை கட்டுப்பாட்டை மீறவே, காவல்துறை கைது, தடியடி மற்றும் நீரை பாய்ச்சி அடித்து கூட்டத்தை கலைத்தது. கைது நடவடிக்கையில் பாமக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி, சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி உள்ளிட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டனர். 


இதனால் ஆத்திரமடைந்த பாமகவினார் காவல்துறையினரின் வாகனங்களை சேதப்படுத்தினர். காவல்துறையினர் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். இது குறித்த வீடியோக்கள் இணையத்தில் இன்றும் உள்ளது. 


இந்நிலையில், பாமக தனது 35வது ஆண்டு துவக்க விழாவைக் கொண்டாடும் விதமாக கடலூரில் என்.எல்.சிக்கு எதிராக போராட்டம் நடத்திய இடத்திலேயே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல்துறையிடம் விண்ணப்பித்தனர். இதனை மறுத்த காவல்துறை அங்கு பொதுக்கூட்டம் நடத்தினால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் கூறி வேறு இடத்தில் பொதுக்கூட்டம் நடத்திக்கொள்ள அறிவுருத்தியது. 


இதனை ஏற்க மறுத்த பாமக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவே, சென்னை உயர்நீதிமன்றமும் அரசு தரப்பு வாதத்தை ஏற்று, பாமகவிற்கு கடலூரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்க மறுத்துள்ளது. மேலும் பாமக தனது பொதுக்கூட்டத்தை விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் நடத்திக்கொள்ளட்டும் எனவும், கூட்டம் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


மேல்முறையீடு செய்யும் அன்புமணி 


சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து பாமக மேல் முறையீடு செய்யும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.