ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், இன்றுடன் பரப்புரை ஓய்கிறது. இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சி வேட்பாளரான காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் பேசியதாவது,
தேர்தல் வாக்குறுதிகள்:
“ தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்றும், ஆட்சிக்கு வரும்போது இதையெல்லாம் எங்களுக்கு செய்து தர வேண்டும் என்றும், தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகள், உறுதிமொழிகள் அதையெல்லாம் நிறைவேற்றித் தர வேண்டும் என்று நீங்கள் வாக்களித்தீர்கள், நீங்கள் நம்பிக்கையுடன் உள்ளீர்கள்.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இந்த 2 ஆண்டுகாலத்தில் செய்த சாதனைகளை சொல்ல வேண்டுமென்றால் மிகப்பெரிய பட்டியலை எடுத்துச்சொல்ல வேண்டும். அதில் சிலவற்றை மட்டும் ஆதாரத்துடன் கூறுகிறேன். தி.மு.க.வைப் பொறுத்தவரை கலைஞர் 5 முறை ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். ஒவ்வொரு முறையும் தேர்தல் அறிக்கையை அவர் வெளியிடுவார். அப்படி வெளியிடும்போது தேர்தல் அறிக்கையை தலைப்புச்செய்தியாக 2 வரியில் வெளியிடுவார்.
சொல்லாததையும் செய்வேன்:
சொன்னதைச் செய்வோம். செய்வதை சொல்வோம் என்பர். அதைத்தான் நான் இங்கு வழிமொழிகிறேன். அதனுடன் சொல்லதை மட்டுமில்ல, சொல்லாததையும் இந்த ஸ்டாலின் செய்வான் என்பதை உங்களிடம் என்னால் காட்ட முடியும். மகளிருக்கு இலவச பேருந்து. ஆட்சிக்கு வந்து நான் போட்ட 5 கையெழுத்துகளில் மகளிர் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யலாம் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். இன்று மகளிர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக கல்லூரிகளுக்கும், அலுவலகத்திற்கும், உறவினர்கள் வீட்டிற்கும் செல்கின்றனர். இந்த காசை மிச்சப்படுத்தி குடும்பத்திற்கு வேறு செலவு செய்கின்றனர். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த திட்டம் கிடையாது.
மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களுக்காக மதிய உணவுத்திட்டம் இருந்தாலும், காலையில் அவர்கள் உணவு அருந்தாமல் வரும் கொடுமைகளை பள்ளிகளில் ஆய்வு செய்ய செல்லும்போது கண்டேன். பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளும்போது ஒரு மாணவனிடம் ஏன் தம்பி சோர்வாக இருக்கிறாய்? என்று கேட்டபோது, அந்த மாணவன் ஐயா நான் காலையில் சாப்பிடாம வந்தேன் என்றான். பல மாணவர்களை விசாரித்தபோது 80 சதவீத மாணவர்கள் எந்த சாப்பாடும் காலையில் சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக காலை உணவு வழங்கும் திட்டத்தை அறிவித்து முதலமைச்சர் காலை உணவு வழங்கும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறோம். காலை உணவு வழங்கும் திட்டம் என்பது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடையாது. தமிழ்நாட்டில் மட்டும்தான் நிறைவேற்றப்படுகிறது.”
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் படிக்க: Erode Election: 'என் உயிரோடு கலந்தது ஈரோடு; ஏன்?' - பிரச்சாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்..!
மேலும் படிக்க: CM MK Stalin Condolence: 'ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கிறார்..' - ஓ.பன்னீர்செல்வத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்..!