கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பண மோசடி வழக்கில் ஆஜரான சவுக்கு சங்கருக்கு 4 நாள் போலீஸ் கஸ்டடி கொடுத்து நீதிபதி உத்தரவு.


 



கரூர் காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் அப்பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவருக்கு சவுக்கு யூடிபில் பணிபுரிந்த விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து எங்கள் youtube இல் விளம்பரம் செய்தால் உங்கள் நிறுவனம் மிகப் பெரிய அளவில் வளரும் என ஆசை வார்த்தை கூறியதால் கிருஷ்ணன் தன் மனைவியிடமிருந்து சுமார் 7 லட்சம் ரூபாய் பெற்று விக்னேஷிடம் கொடுத்துள்ளார்.


 




 


ஆனால் விக்னேஷ் சொன்ன படி நடந்து கொள்ளாததால், விக்னேஷை தொடர்பு கொண்ட கிருஷ்ணன் தனது பணத்தை திரும்ப கேட்ட பொழுது பணம் தர முடியாது என ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் கொடுத்ததாக விக்னேஷ் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் கிருஷ்ணன் புகார் அளித்தார். அதன் படி பிரகாஷை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியதன் அடிப்படையில் அந்த youtube நிறுவனத்தின் உரிமையாளர் சவுக்கு சங்கரை நேற்று முன் தினம் (08.07.2024) புழல் சிறையில் இருந்து அழைத்து வந்து மாலை கரூர் கிளை சிறையில் அடைத்தனர். 


 




 


பின்னர் நேற்று காலை கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குற்றவியல் நீதிபதி பரத் குமார் முன்னிலையில் சவுக்கு சங்கரை ஆஜர் படுத்தினர். நீதிபதியிடம் இந்த வழக்கு சம்பந்தமாக சவுக்கு சங்கரை விசாரிக்க ஏழு நாள் கஸ்டடியை கேட்டு கரூர் போலீசார் கோரிக்கை வைத்தனர். போலீசாரின் கோரிக்கையை பரிசீலித்த நீதிபதி 4 நாள் மட்டும் கஸ்டடி கொடுத்து உத்தரவிட்டார். 


 


 


 





 


சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கரிகாலன் செய்தியாளர்களிடம் சவுக்கு சங்கர் சார்பில் தெரிவித்ததாவது-


புழல் சிறையில் சவுக்கு சங்கரை போலீசார் மிகவும் கொடுமைப்படுத்தி வருகின்றனர். ஒரு சாதாரண கைதிக்கு தர வேண்டிய அடிப்படை வசதிகள் கூட அவருக்கு அளிக்கப்படுவதில்லை, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கருக்கு மருந்து மாத்திரைகள் கூட தராமல் அலைக்கலிப்பட்டு வருகிறார். படிப்பதற்கு புத்தகமோ செய்தி தாள்களோ வழங்கப்படுவதில்லை. மாற்று உடைகள் கூட தர மறுக்கிறார்கள்.


 


 




சவுக்கு சங்கரை பார்க்க வழக்கறிஞர்கள் மனு போட்டு சென்றாலும் கூட அங்கு ஜெயிலரும் போலீசார் உடன் இருக்கின்றனர். எந்த விஷயமே பேச விடுவதில்லை. புழல் சிறையில் உள்ள மருத்துவமனைக்கு கூட அனுமதி அளிக்கப்படுவதில்லை. செந்தில் பாலாஜி அந்த மருத்துவமனையை தனது அலுவலகம் போல பயன்படுத்தி வருகிறார். இந்த வழக்கு கூட ஜோடிக்கப்பட்டது தான். நாளை எங்கள் சார்பில் ஜாமீன் மனு போட உள்ளோம் என தெரிவித்தார்.