வருகின்ற 29ஆம் தேதி காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான கூட்டம் நடைபெற உள்ளது .


காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல்


காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல், கடந்த 2022 ஆம் ஆண்டு, நடைபெற்றது. மேயர் தேர்தலில் மகாலட்சுமி யுவராஜ் காஞ்சிபுரத்தில் முதல் மேயராக பதவி ஏற்றார். துணை மேயராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குமரகுருநாதன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். என்னதான் பெரும்பான்மையை நிரூபித்து காஞ்சிபுரம் மேயராக மகாலட்சுமி பொறுப்பேற்று இருந்தாலும், சில மாதங்களிலேயே கவுன்சிலர்களால் பிரச்சனை எழத் துவங்கியது.


திமுக கவுன்சிலர்கள் போர் கொடி


இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக திமுகவை சார்ந்த கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக திரும்பத் தொடங்கினர். இதற்கு முக்கிய காரணமாக, திமுக கவுன்சிலர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான மரியாதையும், அவர்களுடைய வார்டுகளுக்கு நிதி ஒதுக்கிடும் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை திமுக கவுன்சிலர்கள் முன்வைக்க தொடங்கினர். ஆரம்ப கட்டத்தில் இந்த பிரச்சனை சிறிதாக இருந்தாலும், நாட்கள் செல்ல செல்ல இந்த பிரச்சனை பூதாகரமாக வெடிக்க துவங்கியது.





மாவட்ட செயலாளரிடம் பிரச்சனை கூறுவது, இருதரப்பையும் அழைத்து மாவட்டச் செயலாளர் சுந்தர் சமாதானம் செய்வது எனத் தொடர்ந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனை மாமன்ற கூட்டத்தில் எதிரொலிக்க துவங்கியது. திமுகவின் மேயர் எதிர்ப்பு கவுன்சிலர்களுடன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துணை மேயரும் மேயருக்கு எதிராக போர் கொடி தூக்க துவங்கினர்.


மேயருக்கு எதிராக குடைச்சல்


காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் செந்தில் முருகன் பதவி ஏற்றதிலிருந்து, பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கியது. நேரடியாகவே திமுக கவுன்சிலர்கள் கமிஷனருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை மாமன்ற கூட்டத்தின் முன்வைக்க துவங்கினர். ஆளும் கட்சி கவுன்சிலர்களாலே மாமன்ற கூட்டம் முழுமை பெறாமல் சலசலப்புடன் முடிவடைய துவங்கியது. ஆளும் கட்சி கவுன்சிலர்களுடன் அதிமுக, பாமக உள்ளிட்ட பிற கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்களும் சேர்ந்து கொண்டு மேயருக்கு எதிராக குடைச்சல் கொடுக்கத் தொடங்கினர்.




எதிர்க்கட்சி கவுன்சிலர்களுடன் இணைந்த திமுக கவுன்சிலர்கள், நம்பிக்கை இல்லை தீர்மானம் கொண்டு வர வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து மனு அளித்தனர். தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சியில் பிரச்சினை அதிகரிக்கவே சமாதான பேச்சுவார்த்தைகளும் பலமுறை நடைபெற்றது. அமைச்சர் நேரு அனைத்து கவுன்சிலர்களையும் அழைத்து சமாதான பேச்சு வார்த்தையும் செய்து பார்த்தார் இருந்தும் மேயர் எதிர்ப்பு திமுக கவுன்சிலர்கள் பின்வாங்கவில்லை  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, 33 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என இரண்டு முறை மனு அளித்தனர்.


இல்லாத தீர்மானம்


வருகின்ற 29ஆம் தேதி மாநகராட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் குறித்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் பெரும்பான்மையை மகாலட்சுமி யுவராஜ் நிரூபித்தால் மீண்டும் மேயராக தொடர முடியும்.‌ இதுகுறித்து அனைத்து கவுன்சிலருக்கும் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன், கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.