ஆரத்தி எடுத்த வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் தற்போது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் 5வது முறையாக போட்டியிடுகிறார். இவர் கடந்த 15ம் தேதி நத்தம் தொகுதிக்கு உட்பட்ட காட்டு வேளாண்பட்டி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அந்த பகுதியில் கூடியிருந்த பெண்கள், வேட்பாளர் விஸ்வநாதனுக்கு ஆரத்தி எடுத்தனர். அப்போது விஸ்வநாதனுடன் வந்த அதிமுக நிர்வாகி ஒருவர், ஆரத்தி தட்டில் பணம் போட்டது, வேட்பாளர் விஸ்வநாதன் தனது சட்டைப் பையில் இருந்து பணம் எடுத்து கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. தேர்தல் பிரிவு வீடியோ கண்காணிப்பு குழு தலைவர் மைக்கில் ஆரோக்கியதாஸ் அது தொடர்பாக விசாரணை நடத்திய நிலையில், நத்தம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.
அதைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் மீது வாக்காளர்களுக்கு வாக்களிக்க லஞ்சம் கொடுத்ததாக 171E பிரிவின் கீழ் நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக இந்த தேர்தலில் வேட்பாளர் மீது பதியப்படும் முதல் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.