தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6-ந் தேதி, புதுவையிலும் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பா.ஜ.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. 


புதுச்சேரியில் 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுகிறது. ரங்கசாமி ஏனாம் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதிகளில் போட்டியிடுவதற்கு வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.  இதுதவிர, பிற தொகுதிகளில் அவரது கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். ஆனாலும், என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இது கட்சியினர், தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து, என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. 




இதன்படி தட்டாஞ்சாவடி, ஏனாம் - ரங்கசாமி, திருப்புவனை - கோபிகா, மங்கலம் - ஜெயகுமார், உழவர்கரை - பன்னீர்செல்வம், கதிர்காமம் - ரமேஷ், இந்திராநகர் - ஆறுமுகம், ராஜ்பவன் - லட்சுமி நாராயணன், அரியாங்குப்பம் - தட்சிணாமூர்த்தி, ஏம்பலம் - லட்சுமி காந்தன், நெட்டபாக்கம் - ராஜவேலு, பாகூர் - தனவேலு, நெடுங்காடு - சந்திர பிரியங்கா, காரைக்கால் வடக்கு - திருமுருகன், மாஹே - அப்துல் ரகுமான் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 
என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெற்ற பிறகு, வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது அரசியல் கட்சிகள் மத்தியில் விநோதமாக கருதப்படுகிறது.