திமுகவினர் சொத்து பட்டியல் தொடர்பாக அண்ணாமலை மன்னிப்பு கேட்கக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சொத்து பட்டியல் வெளியீடு தொடர்பாக இணையதளத்தில் வெளியிட்ட வீடியோவை நீக்க வேண்டும் என்றும் நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


மன்னிப்பு கேட்க வேண்டும்:


தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸில், வருமான வரித்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் திமுகவின் சொத்துக்கள், கடன் தொடர்பான விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நோட்டீஸ் கிடைத்த 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடரப்படும் என திமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.


குற்றச்சாட்டுகளுக்கு இழப்பீடாக 500 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அண்ணாமலை புகாரில் தெரிவித்தது போல் நோபல் ஸ்டீல் நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்படவில்லை என திமுக விளக்கம் அளித்துள்ளது.


48 மணி நேரம் கெடு:


"அண்ணாமலையிடம் இருக்கும் ஆடுகள், ரஃபேல் கைக்கடிகாரம் பாஜகவின் சொத்தாக மாறுமா? திமுக உறுப்பினரின் சொத்துக்கள், நிறுவனங்கள் கட்சியின் சொத்தாக மாறாது. பாஜகவிற்கு தேர்தல் பத்திரம் மூலம் 5,270 கோடி ரூபாய் கிடைத்ததை முறைகேடான வழியில் பெற்றது என கூற முடியுமா?" என ஆர்.எஸ். பாரதி அனுப்பிய நோட்டீஸில் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து ஆர்.எஸ் பாரதி சார்பில் திமுக வழக்கறிஞர் வில்சன் அனுப்பிய நோட்டீஸில் “உங்கள் பேச்சு/குற்றச்சாட்டுகளுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். உங்கள் சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் இணையதளத்தில் விடியோவை நீக்க வேண்டும்.


இழப்பீட்டுத் தொகையாக ரூ. 500,00,00,000 (ரூபாய் ஐந்நூறு கோடிகள் மட்டும்) எங்கள் கட்சிக்காரருக்கு வழங்க வேண்டும். எங்கள் கட்சிக்காரர் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதை செலுத்த விரும்புகிறார்.


இந்த அறிவிப்பு கிடைத்து 48 மணி நேரத்துக்குள் இவற்றைச் செய்ய தவறினால், உங்களுக்கு எதிராகப் பொருத்தமான சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடங்குவதற்கு எங்கள் கட்சிக்காரர் முன்வருவார்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக, திமுக தொடர்பான சொத்துப்பட்டியல் என்று சில விவரங்களை அண்ணாமலை நேற்று முன் தினம் வெளியிட்டிருந்தார். திமுக எம்.பி ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி, கலாநிதி மாறன், டி ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், வடசென்னை எம்.பி கலாநிதி வீராசாமி, அமைச்சர் பொன்முடி, அமைச்சர் அன்பில் மகேஸ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன் ஆகியோரின் சொத்து பட்டியல் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சொத்து பட்டியல் என்று சில விவரங்கள் அடங்கிய வீடியோவை அண்ணாமலை வெளியிட்டார். 


சொத்துப்பட்டியல் விவகாரம்:


அதன்படி திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்று அண்ணாமலை தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "மாநிலத் தலைவர் ஆன பிறகு மாதம் ரூ.8 லட்சம் ரூபாய் செலவு ஆகிறது. எனது வீட்டு வாடகை, உதவியாளர்களுக்கான ஊதியத்தை நண்பர்கள் தான் தருகிறார்கள். காருக்கு கட்சி தான் பெட்ரோல் போடுகிறது.


காவல் பணியில் இருந்த போது லஞ்சப்பணத்தில் ரஃபேல் வாட்ச் வாங்கியதாக திமுகவினர் தகவல் பரப்பினர். ரஃபேல் வாட்ச் வரிசையில் 147ஆவது வாட்சை நான் வாங்கினேன். 3 லட்சத்திற்கு இந்த வாட்சை நான் வாங்கினேன். சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடம் இருந்து ரஃபேல் வாட்சை வாங்கினேன். 2021ம் ஆண்டு இந்த வாட்சை வாங்கிய அவர், மே மாதம் என்னிடம் கொடுத்தார்" என்று தெரிவித்தார். மேலும் ரஃபேல் வாட்ச் பில்லை வெளியிட்டார்.