BRS Public Meet LIVE: ”இந்தியாவை இந்து ராஜ்ஜியமாக மாற்ற முயற்சி நடக்கிறது “- இ.கம்யூ கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா

புதிய தேசிய கூட்டணியை அமைக்கும் வகையில் தலைவர்களுடன் சந்திப்பு மேற்கொள்கிறார் தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ்.

செல்வகுமார் Last Updated: 18 Jan 2023 06:36 PM
தெலங்கானாவில் 589 கிராம பஞ்சாயத்துகளுக்கு தலா ரூ.10 லட்சம் அறிவித்த சந்திரசேகர் ராவ்

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக, முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், 589 கிராம பஞ்சாயத்துகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் அறிவித்தார்

”இந்தியாவை இந்து ராஜ்ஜியமாக மாற்ற முயற்சி நடக்கிறது “- இ.கம்யூ கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தரப்பால் அரசியல் சாசனம் மீறப்படுகிறது என்றும் இந்திய நாட்டை இந்து ராஜ்ஜியமாக மாற்ற முயற்சி நடக்கிறது என்றும் இ.கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா குற்றம் சாட்டினார். மேலும், ஒரே நாடு ஒரே தலைவர் என்ற முழக்கத்தை விரைவில் பாஜக ஏற்று கொள்ளும் என்றும் டி. ராஜா கவலை தெரிவித்தார்.

இடைத்தேர்தல் நடத்துகிறார்கள் அல்லது எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகிறார்கள்- பஞ்சாப் முதலமைச்சர்

அமெரிக்க முன்னாள் ஜனாநிதிபதி டொனால்டு டிரம்பின் மனைவி (மெலானியா டிரம்ப்) அரசுப் பள்ளியைப் பார்க்க விரும்பியபோது, ​​அவர்கள் (பாஜக) கெஜ்ரிவால் வாலா' பள்ளியைக் காட்டினார்கள். பாரதிய ஜும்லா கட்சி நாட்டை தவறாக வழிநடத்துகிறது. அவர்கள் ஒவ்வொரு இடத்தையும் கைப்பற்ற விரும்புகிறார்கள். வெற்றி பெறாத இடங்களில் இடைத்தேர்தல் நடத்துகிறார்கள் அல்லது எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகிறார்கள் என தெலுங்கானா மாநிலம் பி.ஆர்.எஸ் கூட்டத்தில் பஞ்சாப் முதல்வர் பகவந்த மன் தெரிவித்தார்.

"சூரியன் வடக்கு நோக்கி நகர்கிறது...தேசிய அரசியல் தெற்கு நோக்கி நகர்கிறது"- அகிலேஷ் யாதவ்

ஜனவரி மாதத்திலிருந்து சூரியன் வடக்கு நோக்கி  நகர்கிறது ( உத்தராயணம் ) என்றும், தேசிய அரசியல் தெற்கு நோக்கி நகர்வதால் தட்சிணாயனம் என்றும் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்

”இன்னும் 400 நாட்கள் மட்டுமே உள்ளது என்பதை பாஜகவே ஏற்றுக்கொண்டது” - அகிலேஷ் யாதவ்

பாஜக ஆட்சிக்கு இன்னும் 400 நாட்கள் மட்டுமே உள்ளது என்பதை நேற்று பாஜக ஏற்றுக்கொண்டது. தங்கள் நாட்களை எண்ணத் தொடங்குபவர்கள் ஆட்சியில் இருக்க முடியாது. இப்போது இன்னும் 399 நாட்கள் மட்டுமே உள்ளன என தெலுங்கானா கம்மத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்


 

பி ஆர்.எஸ் பொதுக்கூட்டம் நேரலை வீடியோ

பி ஆர்.எஸ் பொதுக்கூட்டம் நேரலை வீடியோ


 


ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்டவர்கள் பதவியில் உள்ளனர்- பினராயி விஜயன்.



ஆங்கிலேயரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டவர்கள் இன்று பதவிகளில் உள்ளனர் என்றும், நமது தாய்மொழிகள் அனைத்தையும் ஓரங்கட்டிவிட்டு இந்தியை தேசிய மொழியாக சித்தரிக்கும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் பினராயி விஜயன் தெரிவித்தார். தாய்மொழிகளை அழித்து இந்தியை திணிப்பது, தேசத்தின் ஒருமைப்பாட்டை பாதிக்கும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.




”கேரள அரசு தெலங்கானாவுடன் உள்ளது “ - பினராயி விஜயன்

கேரள அரசும், அதன் மக்களும் தெலுங்கானாவுடன் இருப்பதாக கம்மத்தில் நடந்த பிஆர்எஸ் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.


 


 

பி ஆர்.எஸ் பொதுக்கூட்டம் தொடங்கியது

தெலங்கானா முதலமைச்சர்  சந்திரசேகர் தலைமையில் நடைபெறும் பொது கூட்டம் தொடங்கியது.

4 முதலமைச்சர்கள் மற்றும் பிற அரசியல் தலைவர்கள் சந்திப்பு

தெலுங்கானா முதல்வர் கேசிஆர் மற்றும் 3 முதல்வர்கள், மற்ற தலைவர்கள் கம்மம் பகுதியில் சந்திப்பு நிகழ்த்துகின்றனர். தெலங்கானா முதலமைச்சர் கேசிஆர் மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் பிற தலைவர்கள் கம்மம் சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு வந்தனர்.


 

பிஆர்எஸ் பொதுக்கூட்டத்திற்காக 1,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

மெகா பிஆர்எஸ் பொதுக்கூட்டத்திற்காக 1,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மெகா பிஆர்எஸ் பொதுக்கூட்டத்திற்காக 1,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

கோயிலுக்கு சென்ற சந்திரசேகர் ராவ், அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான் அகிலேஷ் யாதவ்..

தெலங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோருடன் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்குச் சென்றார்.

Background

தேசிய அளவிலான புதிய கூட்டணி அமைக்கும் நோக்கில் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியை சேர்ந்த சந்திரசேகர் ராவ் தெலுங்கானாவில் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.


அக்கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.


பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாகக் காணப்படுவதால், தேசிய அளவில் சந்திரசேகர் ராவ்  செல்ல முடிவு செய்த பிறகு நடைபெறும் முதல் பொதுக்கூட்டம் என்பதால், இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


தெலங்கானாவில் உருவாகும் புதிய கூட்டணி:


தேசிய அளவில் பாஜக அணிக்கு எதிராக காங்கிரஸ் இல்லாத புதிய அணிக்கான அச்சாரத்தை கம்மம் நகரில் இன்று போட்டுள்ளார் தெலங்கானா முதலமைச்சரும் பி.ஆர்.எஸ் கட்சியின் தலைவருமான கே. சந்திரசேகர ராவ். இந்த புதிய அணியின் பிரம்மாண்டகூட்டத்தில்,  திமுக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


தெலங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில், சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதேபோல், அடுத்த ஆண்டு முதல் பாதியில் நாடாளுமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. இந்தச் சூழலில், தேசிய அளவில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 3 மாநில முதலமைச்சர்கள் மற்றும் 2 மாநில முன்னாள் முதலமைச்சர்கள்  பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணியுடன் கூடிய பொதுக்கூட்டத்தை நடத்தியுள்ளார் சந்திரசேகர ராவ். 


அண்மையில், தேசிய அரசியலில் ஈடுபடுவதாகக் கூறி, மாநில அளவிலான தமது கட்சியின் பெயரை தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (TRS)  என்பதில் இருந்து பாரத் ராஷ்ட்ர சமிதி (BRS) என மாற்றினார். மாற்றியது மட்டுமில்லாமல், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, மதசார்பற்ற ஜனதாதளம், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து, பிரம்மாண்ட பேரணி, பொதுக்கூட்டம் மூலம், புதிய கூட்டணிக்கு, கம்மம் நகரில் இன்று அச்சாரம் போட்டுள்ளார் கேசிஆர்.


இந்தக் கூட்டத்தில், டெல்லி முதல் அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சரும் ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவருமான பகவத் மான், கேரள முதலமைச்சரும்  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களில் ஒருவருமான பினராயி விஜயன், சமாஜ்வாதி கட்சித்தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், மதசார்பற்ற ஜனதா தள தலைவரும் கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி மற்றும் இந்தியகம்யூனிஸ்ட் கட்சி முன்னணி தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 


தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக, மெகா கூட்டணி அமைக்கும் வகையில், நாடு முழுவதும் காங்கிரஸ் முன்னணித்தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி பாதயாத்திரை சென்று வருகிறார். காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மெகா கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கிட்டத்தட்ட ஒப்புக் கொண்டு, காங்கிரஸ் தலைமையில் தேசியஅளவில் மெகா கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலைச் சந்திக்கப்போகிறார்கள் என்ற வகையில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், காங்கிரஸ் இல்லாத புதிய அணியை அமைக்கும் வகையில், கேசிஆர் இறங்கியுள்ளது தற்போது தெளிவாகியுள்ளது. இதனால், அடுத்த ஆண்டு வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில், மூன்று பெரிய அணிகள் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தற்போது மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்த்து, கேசிஆர் தலைமையிலான அணி மற்றும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் தலைமையிலான இன்னுமொரு அணி என மூன்று அணிகள் களமிறங்க வாய்ப்பு இருப்பதை, BRS கட்சித் தலைவர் கேசிஆரின் இன்றைய பொதுக்கூட்டம் எடுத்துக்காட்டுகிறது எனலாம். 


திமுக கூட்டணியில் விரிசலா?


கேசிஆரின் கூட்டத்திற்கு திமுக-விற்கு அழைப்பு விடப்பட்டதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்  ஏதும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், திமுக-வைப் பொறுத்தவரை, காங்கிரஸ் உடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தலைச் சந்திப்பதில் எந்தவித குழப்பமும் இல்லை என்பதுதான், திமுக-வின் அரசியல் நகர்வுகளில் தெளிவாகத்தெரிகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு உள்ள நிலையில், காங்கிரஸை இழக்க திமுக தயாராக இருக்காது என்று எதிர்பார்க்கலாம். ஆனால், திமுக-வுடன் இணைந்து தேர்தல் களத்தைச்சந்தித்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடுதான் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. கேசிஆருக்கு ஆதரவாக தற்போது, தெலங்கானாவின் கம்மம் நகரின் பொதுக்கூட்டத்திலும், பேரணியிலும் இக் கட்சிகள் பங்கேற்று இருப்பது, காங்கிரஸ், திமுக கூட்டணியிலிருந்து கம்யூனிஸ்ட்கள் விலகுகிறார்களா என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. 


சந்திரசேகரராவின் இந்தப் பொதுக்கூட்டமும் பேரணியும் தேசிய அளவிலான அரசியலும் புதிய கூட்டணியை உருவாக்குமா, அதன் எதிரொலி தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தமட்டில், இன்று வரை திமுக, காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது. ஆனால், கம்யூனிஸ்ட்கள் இந்தக் கூட்டணியில் இருப்பார்களா அல்லது கேசிஆர் அமைக்கும் புதிய கூட்டணியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலைச்சந்திப்பார்களா என்பது பெரும் கேள்வியாக தற்போது எழுந்துள்ளது. ஏனெனில், கேசிஆரை பொறுத்தமட்டில், தெலங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற  தேர்தலைச்சந்திக்க இருப்பதால், அங்கு பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்கு எதிராகவும் தீவிர அரசியல் செய்து வருகிறார். எனவே, இன்றைய சூழலில், வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில், மூன்று பெரிய கூட்டணிகள் மோதப்போகின்றன என்பது மட்டும்தான் கிட்டத்தட்ட உறுதி என்றால் தவறில்லை. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.