விடுதலை 2


பெருமாள் வாத்தியார் ( விஜய் சேதுபதி) பிடிபட்டதில் முடிகிறது முதல் பாகம். பெருமாள் வாத்தியாரை பிடிக்க உதவி செய்த குமரேசன் ( சூரி) யார் இந்த பெருமாள் வாத்தியார். யாருக்காக அவர் போராடுகிறார் ? அவர் கொள்கை என்ன என்பதை  தெரிந்துகொள்வதே விடுதலை இரண்டாம் பாகத்தின் கதை


பள்ளியில் ஆசிரியராக இருக்கும் பெருமாள் வாத்தியார் தன்னைச் சுற்றி நடக்கும் சாதிய ஒடுக்குறைகளையும் உழைப்புச் சுரண்டல்களையும் பார்த்து அதற்கு எதிராக எதுவும் செய்ய முடியாதவராக நிற்கிறார். கே.கே (கிஷோர்) என்கிற கம்யூனிஸ செயற்பாட்டாளருடன் பெருமாள் வாத்தியாருக்கு பழக்கமேற்படுகிறது. தொழிற்சாலை முதலாளிகளிடம் இருந்து உழைக்கும் மக்களுக்கு நியாயமான கூலி வாங்கிக் கொடுப்பது , தொழிலாளர்கள் சங்கம் அமைக்க போராடுவது என களச் செயற்பாடுகளில் தன்னை இணைத்துக் கொள்கிறார். தொழிற்சாலை முதலாளியின் மகளான மகாலட்சுமி ( மஞ்சு வாரியர்) தனது குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி மக்களுக்காக போராடுகிறார். பெருமாள் வாத்தியார் மற்றும் மகாலட்சுமி இடையில் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துகொண்டு ஒரே கொள்கைக்காக சேர்ந்து போராடுகிறார்கள்.


ஒருகட்டத்திற்கு மேல் ஆயுதம் ஏந்திய போராட்டால் ஈர்க்கப்படும் பெருமாள் வாத்தியார் தனது இயக்கத்தில் இருந்து வெளியேறி மக்கள் படை என்கிற ஆயுத போராட்ட குழுவை உருவாக்குகிறார். இன்னொரு பக்கம் முதலாளிகள் அதிகார செல்வாக்குடன் மக்களுக்காக போராடுபவர்களை கொன்று குவிக்கிறார்கள். 


பிடிபட்ட பெருமாள் வாத்தியார் தப்பிவிட காவல்துறை பெரும் படையும் தேடுதல் நடத்துகிறது. பெருமாள் வாத்தியார் தபினாரா. பெருமாள் வாத்தியாரின் கதையைக் கேட்ட குமரேசன் கடைசியில் யார் பக்கம் நிற்கிறார் என்பதே விடுதலை 2 ஆம் பாகத்தின் கதை.


விடுதலை 2 விமர்சனம்


மிகத் தீவிரமான அரசியல் கொள்களையும் விவாதங்களையும் மையமாக வைத்து நகர்கிறது படம். ஆனால் இவை எதுவும் படத்தின் கருத்து சொல்வதாக இல்லாமல் கதையின் சுவாரஸ்யத்தை குலைக்காமல் கையாண்டிருக்கிறார் வெற்றிமாறன். வர்க்க சாதி முரண் , மாற்றத்திற்கு வன்முறை தீர்வா ? மக்களுக்காக போராடுபவர்களை அரசு என்னவாக சித்தரிக்கிறது என மிகத் தெளிவாக விவாதித்துச் செல்கிறது படன். 


பெருமாள் வாத்தியாராக வரும் விஜய் சேதுபதியின் கரியரில் இது ஒரு மைல் கல்.போராட்ட களத்தில் இருக்கும் தோழராக, ஆயுதம் ஏந்திய புரட்சிக்காரனாக , காதலைச் சொல்லத் தெரியாத அப்பாவியாக என ஒவ்வொரு காட்சியிலும் அசத்தியிருக்கிறார். அவருக்கு ஆன் ஸ்கிரினில் அதே அளவிற்கு சவால் விடும் வகையில் உள்ளது மஞ்சு வாரியர் நடிப்பு.


முந்தைய பாகத்தைக் காட்டிலும் சூரிக்கு இந்த பாகத்தில் காட்சிகள் குறைவுதான் என்றாலும் கடைசிவரை கதை அவரது பார்வையில் தான் சொல்லப்படுகிறது. அரசு இயந்திரத்தில் ஒரு சாதாரண கான்ஸ்டெபிளாக இருக்கு குமப்ரேச பெருமாள் வாத்தியாரின் வாழ்க்கையின் மூலம் தன்னையும் தன்னைச் சுற்றி இயக்கும் அதிகார சக்கரத்தையும் தெளிவாக புரிந்துகொள்கிறார். இதே சக்கரத்தின் ஒரு அங்கமாக அவன் இருக்கப் போகிறானா இல்லையா என்பது படத்தின் முக்கிய தருணங்களில் ஒன்று.


இது எதிலும் தொடர்பில்லாமல் தன்னுடைய ஈகோவினால் மட்டுமே செயல்படுபவராக சேத்தனின் கதாபாத்திரம் தனித்துவமாக அமைக்கப்பட்டிருக்கிறது. சீரியல் பார்த்து கத்தும் பாட்டிகள் போல் சேத்தனை பார்த்து பார்வையாளர்கள் கத்தும் அளவிற்கு நம் கோபத்தை கிளப்பும் ஒரு கதாபாத்திரம்.


கிஷோர் , கென் கருணாஸ் , ராஜீவ் மேனன் , இளவரசு கெளம் மேனன் ஆகியவர்களுக்கு குறைவான காட்சிகள் என்றாலுமே மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ராஜீவ் மேனனின் நடிப்பில் உள்ள இயல்பு ஆச்சரியமடைய வைக்கிறது.


படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் இரு பாடல்கம் பாலைவனத்தில் மழைபோல ரத்த வெள்ளமாக சென்றுகொண்டிருக்கும் கதையில் இளம் தென்றலைப் போல வந்து போகின்றன. பின்னணி இசையைப் பொறுத்தவரை இடைவெளி சண்டைக்காட்சியில் ஒரே பி.ஜி.எம் ரிப்பீட்டில் ஓடுவது போல் தோன்றுகிறது. பெரும்பாலான காட்சிகளில் பின்னணி இசை காட்சியின் இயல்பை கெடுக்காமல் அமைந்துள்ளது.


முழுக்க முழுக்க மக்களுக்கான ஒரு படமாக உருவாகியுள்ளது விடுதலை 2 . முழுக்க முழுக்க மக்களுக்கான இயக்குநராக இப்படத்தை எடுத்திருக்கிறார் வெற்றிமாறன்.