பாஜகவின் ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு பயிற்சி முகாம் மற்றும் மாநில செயற்குழு கூட்டம் திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாஜக செயற்குழு உறுப்பினர் எச் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோவில்களில் குடமுழுக்கு விழாக்கள் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயில் குளங்களை சுத்தப்படுத்தி நீர்வள ஆதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களுக்கும் பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவின் கீழ் 5 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.




 


அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா பேசுகையில்; 


பழனி பால தண்டாயுதபாணி திருக்கோவிலில் உள்ள நவபாஷாண சிலையை திருடிவிட்டு வேறு சிலை அமைக்கப் போவதாக வாய் வழி நம்ப தகுந்த தகவல் வந்துள்ளதாக தெரிவித்தார். தமிழக உயர்நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் மத்திய அரசு அரசியல் செய்கிறதா என்ற கேள்வியை செய்தியாளர்கள் கேட்டபொழுது, ”மத்திய அரசுக்கு எந்தவிதமான அரசியல் காழ்ப்புணர்ச்சியும் கிடையாது” எனவும் தெரிவித்தார். மேலும் தமிழர்களுக்கு மட்டுமே தமிழகத்தில் மொழி வெறுப்பு போதிக்கப்பட்டு தலையில் ஏற்றப்பட்டுள்ளதாகவும் அதனால் தான் மோடி அரசுக்கு எதிராக வெறுப்பு அரசியல் செய்வதாக தெரிவித்தார்.இந்து சமய அறநிலைத்துறை கோவில்களில் பணியாளர் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் தெரிவித்தவர், இந்து சமய அறநிலைத்துறை நியமனத்தில் முறையான தகுதி தேர்வுகள் நடத்தி பணியாளர்களை நியமிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.




மேலும் திருவண்ணாமலை மாடவீதியில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கு பாஜக எதிர்ப்பதாகவும் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டால் தேர் ஓட்டம் நடைபெறாது எனவும் ஆகவே தமிழக அரசு மாடவீதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.செய்தியாளர்கள் அனைவரும் இந்து மதத்திற்கு எதிராக கேள்விகளை கேட்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


மேலும் வள்ளலார் ஆண்டு விழாவில் தமிழக முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், வள்ளலார் திருவுருவ படத்தில் வள்ளலாருக்கு திருநீறு அணிவிக்கவில்லை. அந்த படம் திருநீறு இல்லாமல் நாய் நக்கியது போன்று இருந்தது என சுட்டிக்காட்டினார்.


செய்தியாளர்கள் யாரும் முறையாக படிப்பதில்லை என்று கூறியவர், கால்டுவெல் போன்றோர் எழுதிய புனைவு சுருட்டுகளை படிப்பதாக கூறினார்.  இதனால் செய்தியாளர்களுக்கும் எச் ராஜா உள்ளிட்ட பாஜகவினர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. 10 நிமிடங்களுக்கு மேல் நீடித்த வாக்குவாதம் செய்தியாளர் சந்தித்த அறையிலிருந்து வேகமாக எச். ராஜா வெளியேறினார். இதனால் பாஜக செயற்குழு கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.