கொடிக்கம்பம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் ஆதம்பாக்கத்தில் பாஜக பிரமுகர் வினோத் அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாவது : 

 

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோயம்புத்தூர் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் தற்கொலை படை தாக்குதல் நிகழ்த்த இருந்த அபாயத்தில் இருந்து தப்பினோம். அவர் காவல்துறையின் கண்காணிப்பில் இருக்க வேண்டிய குற்றவாளி. அதை கண்டு கொள்ளவில்லை. பழைய குற்றங்களுக்காக கண்காணிப்பில் இருக்க வேண்டிய குற்றவாளி தண்டனையிலிருந்து வெளியே வந்த பிறகு வெட்டி கொலை செய்கிறார்.'



தினமும் 100 கொடிக்கம்பங்கள் 

 

இது போன்ற குற்றவாளிகளை காவல்துறை பிடிக்க வேண்டுமே தவிர கொடிக்கம்பம் நடுவது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை கிளை அளவில், தினமும் 100 கொடிக்கம்பங்கள்  நட இருக்கிறோம். இன்று முதல் கொடி கம்பங்களை நட ஆரம்பித்து விட்டார்கள். எங்களுடைய வளர்ச்சி இன்னும் வேகமாக இருக்கும் திமுகவின் நம்பர் ஒன் எதிரியாக பாஜக கட்சியை திமுக பார்க்க ஆரம்பித்துவிட்டது.

 

போட்டிகள் இருக்கத்தான் செய்யும்

 

தேர்தல் களத்தில் சந்திப்போம். அதுவரையில் இது போன்ற போட்டிகள் இருக்கத்தான் செய்யும். இதை ஜனநாயகத்தில் தவிர்க்க முடியாது. நமது தொண்டர்கள் 13 பேர் சிறையில் உள்ளனர். ஏழு பேர் கொடிக்கம்பங்கள் வழக்கிலும் மீதமுள்ளவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டார்கள் எனவும் சிறையில் உள்ளனர்.  இதுபோன்ற நடவடிக்கைகளை பிரிட்டிஷ் அரசாங்கம் காந்தி மீது மேற்கொண்டது. இப்பொழுது பிரிட்டிஷ் அரசாங்கம் போல் திமுக அரசு செயல்படுகிறது. நாங்களும் அதை நீதிமன்றத்திலும் களத்தில் சந்திப்போம்.

 

நீட் நாடகம் முடிவுக்கு வரவேண்டும்

 

நீட்டுக்கு எதிராக திமுக கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளது. ஐம்பது லட்சம் கையெழுத்து போடுவதாக கூறியுள்ளார்கள். கோடிக்கணக்கில் உறுப்பினர்களை கொண்ட திமுகவில், திமுக உறுப்பினர்களை வைத்து 50 லட்சம் கை எழுத்துகளை வாங்கிவிடலாம். பொது மக்கள் யாரும் கையெழுத்து போட போவதில்லை தமிழகத்தில் நீட்டை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். 2016ல் ஆரம்பித்த இந்த நீட் நாடகம் முடிவுக்கு வரவேண்டும்.



 

அவர்கள் சாதனையை சொல்லி ஓட்டு கேட்கலாம். ஆனால் ஹிந்தியை எதிர்க்கிறோம். நீட்டை ரத்து என கூறுவார்கள். நேற்று உதயநிதி முட்டையை தூக்கி வந்துள்ளார். நீட்டுக்கு ரகசியம் சொல்ல முடியவில்லை. அதேபோல் இப்பொழுது முட்டை முதலில் வந்ததா கோழி முதலில் வந்ததா என்ற ரகசியத்தை கூறுவதற்காக முட்டையை தூக்கிக் கொண்டு வந்துள்ளார். தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரை திமுகவின் நாடகத்தை ரொம்ப உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்கு மக்கள் தயாராகி விட்டார்கள். அதுவரை இது போன்ற நாடகங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்.

 

அதிமுக -  பாஜக கூட்டணி உள்ளே வெளியே ஆட்டம் என திமுக விமர்சனம் குறித்து கேட்டபோது

 

அது எனக்கு தெரியாத ஆட்டம். அதனால் அதைப் பற்றி நான் கூற விரும்பவில்லை. உள்ளே வெளியே ஆட்டம் என்றால் எனக்கு என்னவென்று தெரியாது. திமுக என்கிற கட்சி அவரின் ஐம்பெரும் கொள்கையில் இருந்து தவறி செயல்படுகிறார்கள். அது ஒரு கார்ப்பரேட் கம்பெனியா குடும்ப நிறுவனமா என வித்தியாசம் தெரியாத அளவிற்கு செயல்படுகிறது. தனிப்பட்ட கம்பெனி போல் மாறிவிட்டது. பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை 10 ஆண்டுகள் நாங்கள் செய்த சாதனையை சொல்லி ஓட்டு கேட்க போகிறோம்.



 

பி.ஏ சேகர்பாபு 

 

துர்கா ஸ்டாலினுடைய பி.ஏ தான் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. துர்கா ஸ்டாலின் எந்த கோயிலுக்கு செல்கிறார்கள் என்று தகவல் சேகரித்து அவருக்கு தேவையான மரியாதை கொடுப்பதற்கும் பாதுகாப்பு வழங்குவதற்குமான ஏற்பாடுகளை மட்டுமே சேகர்பாபு செய்து  வருகிறார்.  துர்கா ஸ்டாலின் எந்த கோவிலுக்கு செல்கிறார் என்பதை பார்ப்பது பாஜக வேலை அல்ல. அது சேகர் பாபு உடைய வேலை. அவர் அவருடைய அமைச்சர் வேலையை பகுதி நேரமாக தான் செய்து வருகிறார். தமிழகத்தில் கடவுளுக்கு கொடுக்கப்படாத மரியாதை, துர்கா ஸ்டாலினுக்கு  வழங்கப்படுகிறது. துர்க்கா ஸ்டாலின் மீது காட்டும் கவனத்தை அமைச்சர் சேகர்பாபு கொஞ்சமாவது கடவுள் மீது காமிக்க வேண்டும்”  என தெரிவித்தார் .