சேலம் மாநகர் திருவாக்கவுண்டனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகிகள் தலைமையில் 200 க்கும் மேற்பட்டோர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, "அதிமுகவை பொறுத்தவரை ஒரு சாதாரண கிளைச்செயலாளர் கிளை கழகச் செயலாளராக இருந்து, அமைச்சர், முதலமைச்சர் இறுதியாக பொதுச்செயலாளர் பொறுப்பு வகிக்கிறேன். இதற்கு உழைப்பு மட்டும்தான் காரணம். வேளாண் பொதுமக்கள் எந்த காலத்திலும் யாருக்கும் அடிமையாக இருந்ததில்லை.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வேளாண் தொழில் முடங்கிவிட்டது. மின்சார கட்டணம் உயர்ந்ததால் பல்வேறு தொழில்கள் செய்யமுடியாமல் பாதிப்படைந்துள்ளனர். விசைத்தறி தொழில் செய்தவர்கள் எல்லாம் தொழிலை மாற்றும் நிலைக்கு வந்துவிட்டனர். வேளாண் பொதுமக்களுக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆயிரம் கோடியில் கால்நடை பூங்கா கட்டிக் கொடுக்கப்பட்டது. வேளாண் மக்களுக்கு பெருந்தொழிலாக இருப்பது கால்நடை வளர்ப்புதான். பால் உற்பத்தியில் தமிழ்நாட்டிலேயே சேலம் மாவட்டத்தில் தான் பால் உற்பத்தி அதிகம் உள்ளது. பால் உற்பத்தியாளர்களும் அதிகமாக உள்ளனர். சேலம் மாவட்டத்தில் தான் வேளாண் மக்கள் அதிகம் நிறைந்த பகுதியாக உள்ளது” என்றும் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கால்நடை பண்ணைகள் பார்வையிடப்பட்டது. அதேபோன்று தமிழகத்தில் விவசாயிகள் பயன்பெறும் கால்நடைப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கால்நடை பூங்காவை கிடப்பில் போட்டு விட்டனர். தமிழக முதல்வருக்கு விவசாயம், தொழில் பற்றி எதுவும் தெரியாது. திமுக முதலமைச்சர் பொம்மை முதலமைச்சரிக இருந்து வருகிறார்.
கால்நடை வளர்ப்பை விவசாயிகள் உபதொழிலாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள விவசாயிகளை அழைத்து வந்து கால்நடை பூங்காவில் தங்கவைத்து கால்நடை எவ்வாறு வளர்க்க வேண்டும், எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும் மற்றும் விவசாயிகளுக்கு விளக்குவதற்கு பிரமாண்டமான அரங்குகள் சேலத்தில் அமைக்கப்பட்டது. தற்போது இதன் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும் கூறினார். திமுக ஆட்சியில் கடுமையான மின்கட்டணம் உயர்வு காரணமாக பல்வேறு தொழில்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு சரிவடைந்துவிட்டது என்றும் தெரிவித்தார்.
இதனிடையே அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில், ”அதிமுக என்பது ஜனநாயக கட்சி என்பதற்கு எடுத்துக்காட்டாக கிளை கழக செயலாளராக இருந்து விசுவாசத்தில் பொதுச்செயலாளராக உயர்ந்துட்டார். தமிழகத்தை கருணாநிதியிடம் இருந்து காக்க வேண்டும் என்பதற்காக எம்ஜிஆர் அதிமுக கட்சியை உருவாக்கினார். சாமானிய மனிதர் பொதுச்செயலாளராக உருவெடுத்துள்ளதால் கூட்டம் கூட்டமாக மக்கள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். திமுக ஆட்சி என்பது அனைத்து மக்களும் கஷ்டப்படுகின்ற ஆட்சியாக இருந்து வருகிறது. மக்கள் விரோத, கொள்ளையடிக்கின்ற ஆட்சியாக இருந்து வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எந்த மாவட்டமாக இருந்தாலும், சொல்லமுடியாத அளவிற்கு கொண்டு வந்து நிறைவேற்றினார்” என்று பேசினார்.