எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையேயான மோதல் வெட்டவெளிச்சம் ஆகியுள்ள நிலையில், பாஜகவின் ஆதரவுடன் அதிமுகவை தன் வசப்படுத்தும் முயற்சியில் செங்கோட்டையன் இறங்கியுள்ளதாக வெளியான தகவலால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இபிஎஸ் - செங்கோட்டையன் இடையே நீடிக்கும் மோதல்
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்திக்கடவு அவிநாசி திட்டம் நிறைவேறியதற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகளின் பாராட்டு விழா நடத்திய போது, அதை புறக்கணித்தார் செங்கோட்டையன். அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சிகளை புறக்கணித்த செங்கோட்டையன், தற்போது சட்டப்பேரவையிலும் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக புறக்கணித்துள்ளார். இதன் மூலம் எடப்படி பழனிசாமி மீது அவருக்கு உள்ள அதிருப்தி வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. இன்று(17.03.25) சட்டப்பேரவை வளாகத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தையும் செங்கோட்டையன் புறக்கணித்துள்ளார்.
அதிமுகவை தன் வசமாக்கும் முயற்சியில் செங்கோட்டையன்.?
பாஜக உடன் அதிமுக கூட்டணி சேர்வதற்கு எடப்பாடி பழனிசாமி தான் முட்டுக்கட்டையாக இருக்கிறார். மற்ற நிர்வாகிகள் எல்லோரும் பாஜகவுடன் நெருக்கமாகவே இருக்கின்றனர். 2026-ல் சட்டமன்ற தேர்தல் வர உள்ள சூழலில், இபிஎஸ் இப்படி முரண்டு பிடிப்பதால், கூட்டணி அமையாமல் போனால், அது அதிமுகவிற்கு இழப்பை ஏற்படுத்தும் என்றாலும், பாஜகவிற்குதான் பெரும் இழப்பாக அமையும். அதனாலயே, அதிமுக உடன் கூட்டணி அமைத்துவிட வேண்டும் என்று பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதிமுகவிற்கு இபிஎஸ் தலைவராக இருக்கும் வரை அது நடக்காது என்பதால், அதற்கு மாற்றாக மற்றொரு அணியை உருவாக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இந்த சூழலில் தான் இபிஎஸ் உடனான அதிருப்தி விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பாஜகவுடன் கைகோர்த்து, அதிமுகவை தன் வசமாக்கும் முயற்சியில் செங்கோட்டையன் ஈடுபட்டுள்ளார் என கூறப்படுகிறது.
இபிஎஸ்-க்கு எதிராக ஒன்று திரளும் எதிரணி
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் ஓபிஎஸ் அணியில் இருக்கும் வைத்திலிங்கத்தை அமமுக பொதுச்செயலாலர் டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் சந்தித்து பேசினார்கள். அதேபோல், ஓ. பன்னீர்செல்வத்தையும் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியானது. டிடிவி மற்றும் ஓபிஎஸ், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் சூழலில், செங்கோட்டையனும் ஓபிஎஸ் உடன் ரகசிய சந்திப்பில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இவர்கள் அனைவரையும் இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுவருவதாகவும், பாஜக ஆதரவுடன் அதிமுகவை தலைமை தாங்க செங்கோட்டையன் ரெடியாகி வருவதாகவும் வெளியாகியுள்ள தகவல், தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், அதிமுக மூத்த தலைவர்கள், செங்கோட்டையனுடன் சமரசப் பேச்சில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கே.பி. முனுசாமி, தங்கமணி, வேலுமணி, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிகிறது. ஆனால், தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் செங்கோட்டையன், சமரசம் செய்துகொள்வாரா.? பொறுத்திருந்து பார்க்கலாம்....