கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் வீரியத்துடன் முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், முகக்கவசம் அணிவதும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது முதலானவை நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாறி வருகிறது. நாடு முழுவதும் தினமும் பல நூறு பேர் முகக்கவசம் அணியாமல் இருப்பதற்காக அபராதம் விதிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டாலும், ஒவ்வொரு நாளும் முகக்கவசம் அணியாதவர்களின் எண்ணிக்கையும் குறைந்த பாடில்லை. கடந்த ஜனவரி 22 அன்று, மத்தியப் பிரதேச மாநில முன்னாள் அமைச்சரும், பாஜக தலைவருமான இமார்தி தேவி முகக்கவசம் அணியாமல், அவருக்கு அளிக்கப்பட்ட முகக்கவசத்தைத் தூக்கி எறிந்து செல்லும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


கடந்த ஜனவரி 21 அன்று, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் முகக்கவசம் அணியாதோருக்கு முகக்கவசங்களை விநியோகித்துக் கொண்டிருந்தனர். பாஜக தலைவர் இமார்தி தேவி முகக்கவசம் அணியாமல் தனது காரில் சென்ற போது அவருக்கு முகக்கவசம் அளித்துள்ளனர் ஆம் ஆத்மி கட்சியினர். தனக்கு அளிக்கப்பட்ட முகக்கவசத்தைப் பெற்றுக் கொண்ட இமார்தி தேவி, கார் கிளம்பியவுடன் அதனை வெளியில் தூக்கி எறியும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.



இமார்தி தேவி


 


மத்தியப் பிரதேச மாநிலத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணியாதோரிடம் கடுமையான முறையில் அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. சுமார் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளைத் தற்போது கொண்டிருக்கும் மத்தியப் பிரதேசத்தில் கடந்த சில நாள்களாக பாதிப்புகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. 


முழு ஊரடங்கு விதிப்பதற்கான எந்தத் திட்டமும் இல்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டிருந்தாலும், மாநில உள்துறை அமைச்சர் நாரோட்டம் மிஷ்ரா இந்த மாதத்தின் தொடக்கத்தில், மத்தியப் பிரதேசத்தின் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் அபராதத் தொகை அதிகரிக்கப்படவுள்ளதாகவும், திறந்த வெளி சிறைகளை மாநிலத்தில் அமைக்கும் திட்டம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். 


 






கடந்த 2 ஆண்டுகளாக, பாஜக தலைவர் இமார்தி தேவி கொரோனா பெருந்தொற்று தொடர்பாக விதிமுறைகளில் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், `நான் மாட்டுச் சாணத்தில் பிறந்து வளர்ந்ததால் எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாது’ என அவர் பேசிய வீடியோ வைரலானது.